திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டோவினோ தாமஸ், கயாடு லோஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பள்ளிச்சட்டம்பி’. வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மலையாளப் படமான இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது படக்குழு.
அப்போது கயாடு லோஹரிடம் தமிழில் பேச இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் பல மொழிகளில் நடித்து வருகிறேன். நான் தென்னிந்தியாவை சார்ந்தவள் இல்லை. என்னால் முடிந்த வரையில் ஒவ்வொரு மொழியையும் பேச முயல்கிறேன். வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் போது, அதன் மையமே அம்மொழியை பேசுவதுதான். நான் ஒவ்வொரு மொழியையும் கற்க 100 சதவீத உழைப்பை போடுகிறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தாருங்கள். நான் அடுத்து வரும் போது தமிழ், மலையாளம் மேலும் பிற மொழிகளையும் நன்றாக பேசுகிறேன்” என்றார்.
பின்பு அவரிடம், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லையே எனக் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “நான் சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்ப வர வேண்டும் என நினைக்கிறேன். டிராகன் படத்திற்கு பார்வையாளர்கள் கொடுத்த அன்பு பெரியது. இன்னும் வித விதமான கதைகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். சரியான கதை அமைந்ததும் அதனை அறிவிப்பேன்” என்றார்.
இவர் கன்னட சினிமாவில் ‘முகில்பேட்டை’ என்ற படம் மூலம் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, மராத்தி என கவனம் செலுத்தி வந்தார். பின்பு தமிழில் ‘டிராகன்’ மூலம் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றார். இப்போது இம்மார்ட்டல், இதயம் முரளி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
