திருச்சியில் முகாமிட்ட மு.க.ஸ்டாலின்- சாலையில் இறங்கி வாக்கு சேகரிப்பு

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருவாரூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையில் இறங்கி சென்று தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் ”என்று கேட்டுக்கொண்டார்.

 

dmk Photograph: (trichy)

இந்த நிகழ்வின்போது முதலமைச்சருடன் திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு, திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில்  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.

Source link