முதல்வர் விஜய் பதிலுரை: தனிப்பட்ட குற்றம் வேறு, ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு வேறு- எதுவுமே 100 நாட்களில் தோன்றியது அல்ல – tamil nadu cm vijay reply for state law and order issue in assembly with individual crimes

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காகவே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது எனக் கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு குற்றம் நடந்த பின்னர் அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. ஏனெனில் அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல. ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னால் குடும்ப பிரச்சினை இருக்கலாம். சொத்து தகராறு இருக்கலாம். முன் விரோதம் இருக்கலாம். பழிவாங்கும் மனநிலை இருக்கலாம். போதைப் பொருள் பயன்பாட்டின் தாக்கம் இருக்கலாம்.

கடந்த காலங்களில் இருந்த சட்டத்தின் மீது பயமில்லாத சூழல், சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதை கலாச்சார வளர்ச்சி போன்றவைகளும், சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகார போட்டி, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம், சமூக வலைதளங்களின் தாக்கம் போன்ற பல்வேறு சமூக காரணிகளும் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம் என்று முதலமைச்சர் விஜய் நீண்ட உரையை வாசித்தார்.

இந்த பேச்சின் சாரம்சத்தை கவனித்தால் தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை. ஏற்கனவே சீர்குலைந்து காணப்பட்ட சட்டம் ஒழுங்கின் நீட்சி தான் தற்போதும் இருக்கிறது என்கிறார். மேலும் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக மீது குற்றம்சாட்டுகிறார். அதுமட்டுமின்றி தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள் என்று சிலவற்றை சுட்டிக் காட்டினார்.

இதே விஷயத்தை தான் கடந்த திமுக ஆட்சியிலும் விளக்கினர். தனிப்பட்ட வகையில் வன்மம் கொண்டு கொடும் குற்றச் செயல்கள் ஏராளமாக அரங்கேறின. சில ரவுடி கோஷ்டிகளுக்கு இடையிலான கொலை சம்பவங்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியாக இருந்த திமுக மீது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மிகவும் காட்டமாக எழுப்பினர். இந்த விஷயத்தில் கோட்டை விட்டதால் தான் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்துள்ளது என விமர்சித்து வருகின்றனர். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் அதேபோன்ற சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், பழிபோடும் அரசியலை தான் கையில் எடுத்துள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.

Source link