தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம். சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச பேச்சு நதியாக ஓடுகிறது என முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாள் விடுமுறைக்கு பிறகு தொடங்கியது. அப்போது காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரை அளித்து பேசிய முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதிலளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. 8 கோடி மக்களின் நலனைத் தீர்மானிக்கும் இந்த அவையில், முன் தயாரிப்பு இல்லாமல் அல்லது பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியாக இருக்காது.அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது வழக்கமானது. அதை மக்கள் நேரடியாகப் பார்த்து தங்களுக்கு எது தேவை என்பதைத் தீர்மானித்துக் கொள்வார்கள்.அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையிலோ, பெண்களையோ அல்லது பிறரையோ தரம் தாழ்ந்து பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்.சமீபகாலமாக ஆபாசமான பேச்சுக்களும், பெண்களைப் பற்றி அவதூறாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசுவதும் அதிகரித்து வருகிறது.
இவற்றைச் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.வீட்டில் தாயாக, அக்காவாக, தங்கையாக இருக்கும் அதே பெண்கள்தான் வெளியிலும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.அனைவரும் இதைக் கவனத்தில் கொண்டு பொறுப்புடனும், முறையுடனும் பேச வேண்டும் என பேரவைத் தலைவர் வாயிலாக முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
