தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் எழுப்பிய கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் தற்போது பதிலுரை வழங்கி வருகிறார். இதில் சட்டம் ஒழுங்கு , குற்றத் தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
“தமிழகம் முழுவதும் கொலைகள் நடக்கின்றன”
கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “கறிக்கடைகளில் கூட இவ்வளவு வெட்டு, குத்து நடக்காது. ஆனால் மாநிலம் முழுவதும் அவ்வளவு கொலைகள் நடக்கின்றன” என தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், காவல்துறையின் பணி என்பது வெறும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமல்ல எனத் தெரிவித்தார்.
“குற்றங்கள் அனைத்தும் கடந்த 100 நாட்களில் உருவானவை அல்ல”
தமிழகத்தில் தற்போது நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் கடந்த 100 நாட்களில் உருவானவை அல்ல எனக் கூறிய முதல்வர் விஜய், குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்றச் செயல்கள் நடைபெறலாம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், குற்றங்களைத் தடுப்பதுடன், அவற்றுக்கான சமூக மற்றும் உளவியல் காரணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்போம்”
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கவும், உளவியல் ரீதியாகவும் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக் கழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இதற்காக தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர்ந்து எம்எல்ஏக்கள் கவலை தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட முதல்வர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்தவிதமான குற்றங்கள் நடைபெற்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே தமிழக அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
“சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இதற்காக 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிரடிப்படையினருக்கு 1,327 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 109 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அதிநவீன உபகரணங்கள் ரூ.357 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
268 வழக்குகள் கண்டறிதல்.. 125 பெண்கள், குழந்தைகள் மீட்பு
இந்த நடவடிக்கைகள் மூலம் 268 குற்ற வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். மேலும், 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 21 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிலுரையில் குறிப்பிட்டார்.
Source link
