சென்னை: தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு

சென்னை: தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

வில்லிவாக்கத்தில் நடந்த தவெக கூட்டத்தில், கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும்போது, பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில், உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டன. அயனாவரத்தைச் சேர்ந்த கலைவாணி, 45, என்பவரின் தொடையில் காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தோர் அலறியடித்து ஓடினர்.

கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அப்பு மற்றும் ரித்விக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தவெக நிகழ்ச்சிகளுக்கு தமிழக போலீசார் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”தமிழகத்தில் தவெக கட்சி போலீசார் அனுமதி பெற்று பிரசாரம் நடத்தினாலும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் பிரசாரத்தின் போது பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஒருவருக்கு கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தாதது கவலை அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தவறான பெயரில் கடிதம்

நிர்மல் குமார், தன் புகார் கடிதத்தை உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கும் அனுப்பியுள்ளார். அஜய் பல்லா, ஒன்றரை ஆண்டுக்கு முன் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார். யார் உள்துறை செயலாளர் என்று தெரியாமல் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளதாக, இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மனு

தவெக பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்துள்ளார். மனுவில், ”முதல்வர் ஸ்டாலினின் நேரடித் தூண்டுதலின் பேரிலும், சென்னை போலீஸ் கமிஷனரின் உதவியுடனும், திமுகவைச் சார்ந்த சமூக விரோத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது.

சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தேர்தலில் நீதி மற்றும் நியாயமான நடைமுறைகளை நிலைநாட்ட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

Source link