நடிகரும், இயக்குநருமான கென் இயக்கத்தில், கருப்பையா தயாரிப்பில் உருவானப் படம் யூத். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.
அதில் நடிகை நளினி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “நமது தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மறைந்த பாடகர் எஸ்.பி.பி சாருக்குப் பிறகு, மூச்சு விடாமல் அத்தனை பேரின் பெயர்களையும் மறக்காமல் மேடையில் நன்றி சொன்ன பெருமை இவரையே சாரும். வாகினி பிரசாத், ஏவிஎம் போன்ற ஒரு பெரிய நிறுவனமாக உங்கள் தயாரிப்பு நிறுவனம் வளர வாழ்த்துகிறேன்.
சூரஜ் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய படங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவரை ஒருமுறையாவது சந்திக்க மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். அவரோடு நடிக்கும்போது, அந்தத் தொழில் மீது அவர் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு வியந்தேன். ஏதேனும் ஒரு சின்ன தவறு நடந்தால் கூட, ஒன் மோர் என்று கேட்டு அந்தத் தமிழ் வார்த்தைகளைச் சரியாகப் பேச அவர் காட்டிய ஆர்வம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரைப் பார்த்த பிறகுதான் இந்தத் தொழிலின் மீது எனக்கும் பெரிய பக்தி வந்தது. இந்தப் படத்தில் அந்தப் பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாகச் செய்திருக்க முடியாது.
தேவதர்ஷினி காமெடி என்கிற வட்டத்திற்குள்ளேயே இருந்த அவரை, ‘நீங்களும் ஒரு கதாநாயகிதான், உங்களால் சாதிக்க முடியும்” என்று நம்பி, இயக்குநர் கென் அவருக்கு ஒரு அற்புதமான பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதை அவர் மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இன்ஃப்ளூயன்சர்கள் இளைய கலைஞர்களைப் பார்த்து நான் மிரண்டு போனேன். ‘நாம் நூறு படம் நடித்திருந்தாலும் இவர்களிடம் இருக்கும் வேகம் நம்மிடம் இல்லையே’ என்று தோன்றியது.
எனக்கு எப்போதும் என் இயக்குநர் டி.ராஜேந்தர் சார் தான் ஆகச்சிறந்தவர். அவருக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் அளவிற்கு இன்று கென் வளர்ந்து நிற்கிறார். ஸ்கிரிப்ட் கையில் இல்லாமலேயே, பத்து பேருக்குப் பத்து விதமாக சொல்லிக் கொடுக்கும் அவரது அந்தத் திறமை அசாத்தியமானது. ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்பதை கென் நிரூபித்துவிட்டார். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாண்டு, எல்லோரையும் அன்பால் கட்டிப்போட்டு ஒரு அழகான படத்தை அவர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஓர் அணில் போல நானும் பங்களித்ததில் பெருமை கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
