சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: இன்னும் 18 மாதங்கள்- கடைசி 25 கி.மீ.,க்கு மீண்டும் டெண்டர் – chennai bengaluru expressway completion plan on 2028 after final 25km strech retender works

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை இணைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கடைசி கட்ட 25 கிலோமீட்டர் தூர வழித்தடமானது இழுபறியாக கொண்டிருக்கிறது. இதற்கு புதிதாக டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே செல்கிறது. கிட்டதட்ட 8 ஆண்டுகளாக திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து பணிகள் முடுக்கி விடப்பட்டு 2024ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றனர். ஆனால் பல காரணங்களால் இதுவரை முழுமை பெறவில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களில் இந்த அதிவிரைவு சாலை அமைக்கப்படும் சூழலில், கடந்த 2024 டிசம்பர் மாதம் கர்நாடகா எல்லைக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

தமிழக எல்லையில் 4 பேக்கேஜ் நெடுஞ்சாலை பணிகள்

ஆந்திர மாநிலத்தில் 95 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்துவிட்டன. எஞ்சியிருப்பது தமிழக எல்லைக்குள் மட்டுமே. மொத்தம் 10 பேக்கேஜ்களாக வெவ்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் சூழலில் தமிழகத்திற்குள் மட்டும் 4 பேக்கேஜ்கள் வருகின்றன.

அவை குடிபாலா – வாலாஜாபேட்டை (24 கி.மீ, மாண்டிகார்லோ கன்ஸ்ட்ரக்ஷன்), வாலாஜாபேட்டை – அரக்கோணம் (24.5 கி.மீ, கே.சி.சி பில்ட்கான்), அரக்கோணம் – காஞ்சிபுரம் (25.5 கி.மீ, டி.பி.ஜெயின் அண்ட் கோ), காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் (32.1 கி.மீ, ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன் கார்ப்பரேஷன்) ஆகும்.

இழுபறியாகும் அரக்கோணம் – காஞ்சிபுரம் சாலை

குறிப்பாக அரக்கோணம் – காஞ்சிபுரம் இடையிலான 25.5 கிலோமீட்டர் தூரப் பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் நிதிப் பிரச்சினை காரணமாக கிடப்பில் போட்டது. இதுதொடர்பாக NHAI பலமுறை அறிவுறுத்தியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இந்த சூழலில் 2025 நவம்பரில் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேயில் எஞ்சிய பணிகள்

வழக்கு விசாரணையால் பணிகள் இழுபறியானது. இதன் காரணமாக 9 பெரிய பாலங்கள், ஒரு நடை மேம்பாலம், இரண்டு கிரேடு செப்ரேட்டர்கள், இரண்டு சிறிய பாலங்கள், 18 சுரங்க வழிப் பாதைகள், சாலைக்கு கீழே பெட்டி வடிவிலான வழித்தட இணைப்பு ஆகியவற்றின் பணிகள் பாதிக்கப்பட்டன. மொத்தமுள்ள 262 கிலோமீட்டர் தூர சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் 204.5 கிலோமீட்டர் முதல் 230 கிலோமீட்டர் வரையிலான பகுதியில் தான் பணிகள் தாமதமாகி வருவது கவனிக்கத்தக்கது.

எஞ்சிய பேக்கேஜிற்கு மீண்டும் டெண்டர்

தமிழக எல்லைக்குள் வரும் எஞ்சிய மூன்று பேக்கேஜ்களும் நடப்பாண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரக்கோணம் – காஞ்சிபுரம் இடையிலான சாலைப் பணிகளுக்கு புதிதாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கினால் எப்படியும் 18 மாதங்கள் வரை ஆகும் என்கின்றனர்.

சென்னை அதிவிரைவுசாலை – 2028ஆம் ஆண்டு திறப்பு விழா

அப்படி பார்த்தால் 2028ஆம் ஆண்டு முதல் பாதியில் தான் முழு பணிகளும் நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது. எனவே சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையானது முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.

Source link