நமது நிருபர்
பார்லிமென்டில், ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2014ம் முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அமராவதியே மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என்று அறிவித்து இருந்தார்.
2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, அமராவதியில் ஒரே தலைநகரம் அமைப்பதற்கு பதிலாக மூன்று தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்தார்.
தற்போது ஆட்சியில் உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஆந்திராவின் தலைநகராக அமராவதியை மட்டும் கொண்டு வர முடிவு செய்தது. ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதிக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 01) ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மசோதாவை கொண்டு வந்தார். சபாநாயகர் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டார். இது மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதிக்கு சட்டரீதியான அந்தஸ்தை வழங்க மசோதா வழி வகை செய்கிறது.
இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: அமராவதியே மாநிலத்தின் ஒரே தலைநகராகத் தொடரும். அமராவதியிலிருந்து ஒரு அங்குலம் கூட மாற்றப்படாது. மூன்று தலைநகரங்கள் என்பது மாநிலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
