இயக்குநர் சுந்தர் சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதாவது அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக களம் காண்கிறார். இதுவரை அரசியலில் பெரிதாக தலை காட்டாமல் இருந்த சுந்தர் சி கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இருவரும் ஏற்கனவே சினிமாவில் ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின்றனர். அதாவது சுந்தர் சி இயக்கிய அரண்மனை , காஃபி வித் காதல், அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ் உள்ளிட்ட 5 படங்களையும் ஏசி சண்முகம் தனது பென்ஸ் மீடியா மூலம் தயாரித்திருந்தார். இவர் தயாரித்த மொத்த படங்களுமே இவை அனைத்தும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி-யின் அரசியல் அண்ட்ரி யாரும் எதிர்பாராத விதமாக அமைந்திருந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் அவர். அதில் இதுவரை சினிமாவில் மிகப்பெரிய ஆதரவை அளித்த நீங்கள் எனது புது முயற்சிக்கும் ஆதரவளியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் மதுரைக்கு கிளம்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “என்னுடைய மூத்த சகோரர் ஏ.சி. சண்முகம் என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நான் பெரிய வெற்றியை கொடுக்கவேண்டும் என நினைக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் அருளால் வெற்றி பெறுவேன்.
ஏப்ரல் 4ஆம் தேதி.வேட்புமனு தாக்கல் செய்கிறேன். மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வெற்றி கனியை தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் மதுரை மத்திய தொகுதியில் தான் இருப்பேன் என உறுதிபட கூறுகிறேன். இந்த தேர்தல் முடிவை வைத்து தான் என்னுடைய அடுத்த கட்ட நகர்வு இருக்கும். என் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர் விஜய். அதே போல் தான் நானும். என்னுடைய மனைவி குஷ்பு அவரை தம்பி போலத்தான் கருதுகிறார். அவரும் குஷ்புவை அக்கா என்றுதான் அன்போடு அழைப்பார். அதனால் எந்த வகையிலோ அவரையோ அவரது கட்சி மற்றும் வேட்பாளர்களையோ நான் விமர்சிக்க தயாராக இல்லை” என்றார்.
