‘விடைபெற்று விடுவேனே தவிர மீண்டும் நிற்க மாட்டேன்’- துரைமுருகன் உருக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் 11 வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் அறிமுக கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், ”ஏதோ சம்பிரதாயத்துக்காக இந்த கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். நான் உங்களோடு இருந்தவன், வளர்ந்தவன். உங்களில் ஒருவன் நான். எல்லா அரசியல்வாதிகளும் என்னை பொறுத்தவரை நாங்கள் அதை செய்வோம் இதை செய்வோம் என சொல்லி ஓட்டு கேட்பார்கள். ஆனால்  மு.க.ஸ்டாலின் அனைத்தையும் செய்து விட்டு ஓட்டு கேட்கிறார்கள். சொன்னதை செய்வது திமுகவின் வழக்கம். தண்ணீர் பற்றாக்குறை இருந்த காட்பாடியில் காவிரி கூட்டு குடிநீரை உங்கள் வீட்டில் குதிக்க செய்தவன் இந்த துரைமுருகன். ஆங்கிலேயர் காலம் முதம் பொன்னை ஆற்றில் பாலம் இல்லாமல் இருந்ததை இந்த சிறுவன் வந்து தான் கட்டினேன். காட்பாடி தொகுதியில் இது இல்லை என சொல்லும் அளவுக்கு எல்லாவற்றையும் செய்தவன் இந்த துரைமுருகன்.  அது நீங்க போட்டா ஓட்டல் தான் சாத்தியம். எந்த இடத்தில் நான் இடறியிருக்கிறேன் என சொல்லுங்கள். எல்லோரும் தொகுதி என்பார்கள் நான் காட்பாடியை திருக்கோயில் என்பேன். மக்களை நான் தெய்வங்களாக கருதுகிறேன்.

என்றைக்காவது நான் தொகுதியில் கூலிங் கிளாஸ் போட்டு பார்த்து இருக்கீங்களா, பார்க்கும் எவனாவது ”பார்ரா பெரிய மைனர் ஆகிவிட்டான்” என சொல்லுவார்கள் என்ற அச்சம் எனக்கு. அதேபோல என் காரில் ஏசி இருக்கு ஆனால் ராணிப்பேட்டையை தாண்டினா கண்ணாடியை இறக்கிவிடுவேன். எவனாவது பார்க்கிறானா இல்லையா என பார்பேன் .அவன் பார்க்கவில்லை என்றாலும் அவனை பார்த்து  ”டேய் என டாட்டா காட்டுவேன்” இல்லையென்றால் ஓட்டு போடாமல் போயிடுவான். அப்படி பயந்து கிடக்கிடப்பவன்.

சவால் விட்டு சொல்கிறேன் இந்த 40 வருடத்தில் யாரிடமாவது ஒரே ஒரு ஐந்து பைசா வாங்கியவன் என சொல்ல முடியுமா? தண்ணி அடிச்சான் என சொல்ல முடியுமா? உலகம் பூரா சுற்றி இருக்கிறேன் காமன்வெல்த் கூட்டத்திலே லண்டனில் உட்கார்ந்து எல்லோரும் விருந்து சாப்பிட்டார்கள். அதைத் தொட்டுப் பார்க்காதவன். அதிலிருந்து வெளியேறியவன். மதுவையும் மாதுவையும் தூர நிறுத்தியவன். ஆகையால் என் மக்கள் தொகுதி இதை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பவன். ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் காட்பாடியின் பெயரை ஏற்றியவன் நான். காட்பாடியில் தான் ஒருவன் அதிகம் முறை வெற்றி பெற்றுள்ளான் என்பது அகில இந்திய ரெக்கார்ட் சொல்லும்

இவ்வளவு நாள் பழகி இருக்கிறேன் எதிர்க்கட்சியினர் யாரையாவது பழிவாங்கி உள்ளேனா? யார் மீதாவது கேஸ் போட்டுள்ளேனா? உண்மையை சொல்லப்போனால் அவர்களுக்கு உதவி இருக்கிறேன். என்னால் முடிந்ததை செய்துள்ளேன். எந்த நிலையிலும் நீதி, நேர்மை தவறான இருந்துள்ளேன். என்னால் முடிந்ததை செய்துள்ளேன். அப்பேர்பட்டவனை எதிர்க்கிறதுக்கு காட்பாடியில் எல்லா கட்சிக்காரர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். வெளியூரில் இருந்து ஒருவனை இம்போர்ட் பண்ணி இருக்கிறார்கள் அது நியாயமா? நான் உங்களோடு வாழவில்லையா? ஆக எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். நான் இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைவு இருக்கு. இந்த ஐந்து ஆண்டு காலத்தில்  எல்லாவற்றையும் செய்துவிட்டு நிறைவாக, என்னை விட்டு விடுங்கள் என நானே விடை பெற்று விடுவேனே தவிர மீண்டும் நிற்க மாட்டேன்” என துரைமுருகன் பேசினார்.

Source link