பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளைக் கையாளும் பல மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மேற்காசியாவில் தொடரும் போர், அது ஏற்படுத்தி வரும் தாக்கங்கள், இந்தியா சந்தித்து வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடியது. இதில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழல் குறித்தும், இந்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரவாக விளக்கினார்.
இதன் தொடர்ச்சியாக இந்த போர் உலகப் பொருளாதாரத்தின் மீது குறுகிய, நடுத்தர, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா மீதான அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டன. மேலும், அவற்றை எதிர்கொள்வதற்கான உடனடி மற்றும் நீண்ட கால தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்திய பங்குச் சந்தைகளில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.51 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
