விசிக உட்கட்சி பூசலை சாதகமாக பயன்படுத்தியதா திமுக?

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: ஆளுர் ஷாநவாஸ், பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூன்று எம்எல்ஏகளுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலர் இருப்பதால் இந்த முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மூவரும் தங்களுடைய வருத்தங்களை வேதனைகளை தன்னிடத்தில் நேரிலே வந்து வெளிப்படுத்தலாம்.

தொடர்ந்து கட்சியில் நல்ல பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். வாய்ப்பளிக்காத மூன்று பேரும் இன்றைக்கு கட்சிக்கு வந்தவர்கள் கிடையாது. இதனால் என்னுடைய முடிவை தவறாக கருத மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதற்கிடையே திருமாவளவன் இன்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். தங்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ், சிட்டிங் எம்எல்ஏவாக பதவி வகிக்கும் நாகப்பட்டினம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது ஆச்சரியம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஷாநவாஸ் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக, திமுக தரப்பினர் எங்களுக்கு தெரிவித்தனர் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், விசிக எம்எல்ஏ ஷாநவாஸ் இடம் திமுக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதும், அந்த விபரமே திருமாவளவனுக்கு தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நிலவும் பூசலை, திமுக தலைமை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Source link