vinayagar Chaturthi 2026 puja விநாயகர் சதுர்த்தி 2026 : விநாயகருக்கு படைக்க வேண்டிய 21 வகையான இலைகள்

விநாயகருக்கு சமர்பிக்கப்படும் பொருள் என்றால் நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருகம்புல், எருக்கம்பூ இவை இரண்டும் மட்டும் தான். ஆனால் விநாயகப் பெருமானுக்கு 21 வகையான இலைகள் சமர்பித்து வழிபடும் வழக்கம் நம்முடைய பண்டை கால வழிபாட்டு முறைகளில் இருந்துள்ளது. விநாயகருக்கு 21 இலைகளை கொண்டு செய்யப்படும் பூஜைக்கு ‘ஏகவிம்சதி பத்ர பூஜை’ என்று பெயர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 21 வகையான இலைகளை படைப்பது மிக முக்கியமானதாக கருதப்படுவது. 21 வகையான இலைகளா? என ஆச்சரியப்பட வேண்டாம். இந்த 21 வகையான இலைகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விநாயகருக்கு படைக்க வேண்டிய 21 வகையான இலைகள் :

1. முல்லை இலை – விநாயகருக்கு முல்லை இலைகளைக் கொண்டு “ஓம் மங்களமூர்த்தயே நமஹ – முல்லாபத்திரம் சமர்ப்பயாமி” என்று கூறி அர்ச்சனை செய்வது நன்மை தரும். இதனால் அறிவுக்கூர்மை, கல்வியில் வளர்ச்சி, உத்தியோகத்தில் பதவி உயர்வு, சமூகத்தில் நல்ல மதிப்பு, புகழ் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, அமைதி ஏற்படும்.

2. கரிசலாங்கண்ணி இலை – கரிசலாங்கண்ணி இலையைச் சமர்ப்பிக்கும் போது பொதுவாக “கஜானனாய நமஹ – பிருங்கராஜ பத்திரம் சமர்ப்பயாமி” என்ற மந்திரத்தைக் கூறி வழிபடுவார்கள். இல்வாழ்க்கைக்கு தேவையான செல்வம் பெரும்.

3. வில்வ இலை – விநாயக சதுர்த்தி அன்று கணேசருக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் “இன்பம்” மற்றும் விரும்பிய அனைத்து நற்பலன்களும் கிட்டும் என்பது ஐதீகம். இது வாழ்வில் உள்ள தடைகளை நீக்கி, மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். சிவசக்தி சொரூபமாக விளங்கும் விநாயகரை வில்வத்தால் பூஜிப்பது, ஒட்டுமொத்த சிவ குடும்பத்தின் அருளையும் நமக்கு பெற்றுத் தரும்.

4. அருகம்புல் – விநாயகருக்கு 3 அல்லது 5 இதழ்கள் கொண்ட அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்வது வாழ்வில் உள்ள அனைத்துத் தடைகளையும் (விக்னங்களை) அகற்றும். விநாயகருக்கு விருப்பமான பொருட்களில் மிக முக்கியமானது அருகம்புல்.

5. இலந்தை இலை – இலந்தை மரத்திற்கு சமஸ்கிருதத்தில் ‘பதரி மரம்’ என்று பெயர். மகாவிஷ்ணு பத்ரிநாத்தில் இலந்தை மர வடிவில் குடிகொண்டிருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே, இந்த இலையைக் கொண்டு விநாயகரை வழிபடுவது மகாவிஷ்ணுவின் அருளையும் சேர்த்தே தரும்.இலந்தை இலைகளால் விநாயகரை பூஜிக்கும் போது, மனம் அமைதியடைந்து ஆன்மீக ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று இந்த இலையைச் சமர்ப்பிக்கும் போது, “ஓம் கபிலாய நமஹ – பதரி பத்ரம் சமர்ப்பயாமி” என்று கூறி வழிபடுவார்கள்.

6. ஊமத்தை இலை – ஊமத்தை ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த மூலிகையாகும். மனிதனிடம் உள்ள அகங்காரம், பொறாமை, கோபம் போன்ற நச்சுத்தன்மையான குணங்களை விநாயகரின் பாதத்தில் சமர்ப்பித்து, மனதைத் தூய்மையாக்கிக் கொள்வதை இது ஆன்மீக ரீதியாகக் குறிக்கிறது.ஜோதிட சாஸ்திரத்தின்படி, விநாயகருக்கு ஊமத்தை இலை மற்றும் மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் ராகு-கேது போன்ற நிழல் கிரகங்களின் தோஷங்களும், மன உளைச்சல்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

7. வன்னி இலை – வன்னி மரம் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்தே வெற்றி பெற்றனர். எனவே, விநாயகருக்கு இந்த இலையைச் சமர்ப்பிக்கும் போது, நம் வாழ்வில் உள்ள எதிர்ப்புகள், தடைகள் மற்றும் பயம் நீங்கும்.வன்னி மரம் சனி பகவானுக்குரிய விருட்சமாகும். வன்னி இலையைக் கொண்டு விநாயகரை வழிபடுவதன் மூலம் சனி தோஷங்களின் வீரியம் குறையும். ஏழரை சனி, அஷ்டம சனியால் ஏற்படும் துன்பங்கள் விலகும். தீய எண்ணங்கள் எரிந்து, துவங்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

8. நாயுருவி இலை – விநாயகர் புராணத்தின் படி, விநாயகருக்கு நாயுருவி இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களுக்கு முகப் பொலிவு, அழகு மற்றும் நல்ல வசீகரத் தோற்றம் கிட்டும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். ஆன்மீக ரீதியாக, நாயுருவி இலை புதன் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது. வித்தை மற்றும் புத்திக்கு அதிபதியான புதனின் அம்சமான இந்த இலையைக் கொண்டு விநாயகரை (புத்தி காரகன்) வணங்கும்போது கல்வி மற்றும் ஞானம் பெருகும்.நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

9. கண்டங்கத்திரி இலை – ஆன்மீக நம்பிக்கைகளின்படி, விநாயகருக்குக் கண்டங்கத்திரி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும் மற்றும் வறுமை நீங்கிச் செல்வம் சேரும். வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் பயங்கள் நீங்கி, வீரமும் மன தைரியமும் வளரும்.

10. மந்தாரை இலை – மந்தாரை இலைகள் மற்றும் மலர்களைக் கொண்டு விநாயகரை வழிபடும் போது, எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, மன அமைதியும் மனத் தெளிவும் உண்டாகும். நீண்ட கால காரிய தடைகள், நஷ்டங்கள் நீங்கும். இது தெய்வீக ஆற்றலை ஈர்க்கக் கூடியதாகும்.

11. எருக்கம் இலை – விநாயகருக்கு எருக்கம் இலை சமர்பித்து வழிபட்டால் புண்ணியங்கள் சேரும். கண்திருஷ்டி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை அதிகரிக்கும். மன அமைதி, ஆரோக்கியம் கிடைக்கும்.

12. மருத இலை – மருத இலை கொண்டு விநாயகரை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். வாழ்வில் இருக்கும் தீய சக்திகள், கஷ்டங்கள் நீங்கும். தெய்வீக அருள் கிடைக்கும்.

13. விஷ்ணுகிராந்தி இலை – விநாயகருக்கு விஷ்ணுகிராந்தி இலையை படைத்து வழிபட்டால் புத்தி கூர்மை ஏற்படும். கல்வி, தொழிலில் வெற்றி கிடைக்கும். கல்வி தடைகள் நீங்கும். “ஓம் பின்னதந்தாய நமஹ விஷ்ணுகிராந்தி பத்ரம் பூஜயாமி” என்ற மந்திரத்தைக் கூறி இந்த இலை விநாயகருக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.

14. மாதுளை இலை – மாதுளை இலை கொண்டு விநாயகரை வழிபடுவதன் மூலம் பெரும் புகழும், நற்பெயரும் உண்டாகும். நேர்மறை ஆற்றலும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்.

15. தேவதாரு இலை – விநாயகப் பெருமானுக்குத் தேவதாரு இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடும்போது, வாழ்க்கையில் வரும் எந்தவொரு சவாலையும், துன்பத்தையும் எதிர்கொள்ளக்கூடிய எதையும் தாங்கும் மனோ தைரியமும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் ஏற்படும். தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும். காரிய தடைகளும், துன்பங்களும் விலகும்.

16. மருக்கொழுந்து இலை – விநாயகருக்கு மருக்கொழுந்து இலை படைத்து வழிபடுவதால் எதிர்மறை ஆற்றலை நீக்கி, மனதிற்கு அமைதியையும், நேர்மறை அதிர்வுகளையும் தருகிறது.தடைகள் நீங்கி, காரிய சித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.இதன் தெய்வீக மணம் தியானம் மற்றும் வழிபாட்டின் போது மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது.

17. அரச இலை – அரச மரம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகப் போற்றப்படுகிறது. இதன் இலையில் விநாயகருக்கு நிவேதனம் படைக்கும்போது, ஒட்டுமொத்த தேவர்களின் ஆசியும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.அரச மரம் சனிக்கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்தது. விநாயகருக்கு அரச இலையில் பலகாரங்களை வைத்து வழிபடுவதன் மூலம் சனியினால் ஏற்படும் தடைகளும், ஜாதக ரீதியான தோஷங்களும் நீங்கும்.புத்தி கூர்மை, காரிய வெற்றி மற்றும் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

18. அகத்தி இலை – விநாயகருக்கு அகத்தி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் தடைகள் நீங்கும். அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதியும், மன நிம்மதியும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

19. மாவிலை – விநாயகரின் அருளை வீட்டிற்குள் கொண்டு வரும்.விநாயகருக்கு மாவிலை மாலை அணிவித்தோ அல்லது பூஜையில் சமர்ப்பித்தோ வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியும், எடுக்கும் காரியங்களில் தடைகளற்ற வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

20. ஜாதிமல்லி இலை – விநாயகருக்கு ஜாதிமல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் சொந்த வீடு, மனை மற்றும் பூமி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் நேர்மறை அதிர்வுகளையும் மன அமைதியையும் தரும்.

21. தாழம்பூ இலை – தாழம்பூ இலைகளைக் கொண்டு விநாயகரை அர்ச்சிக்கும் போது, நம் வாழ்வில் உள்ள நீண்டகாலத் தடைகள், தொழில் முடக்கங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது. பிரம்மனுக்குப் பொய் சாட்சி சொன்னதால் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளான தாழம்பூ, தனக்கு விமோசனம் வேண்டி விநாயகரை வழிபட்டதாக ஆன்மீகக் கதைகள் கூறுகின்றன.விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் தாழம்பூ இலைகளால் அர்ச்சனை செய்வது குடும்பத்தில் அமைதியையும், மன நிம்மதியையும் கொண்டு வரும். தோஷங்கள் விலகும்.

Source link