தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சூர்யாபாய். இவர் கழுத்து மற்றும் கைகளில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பார். இவர் அணிந்திருக்கும் நகைகளின் எடை கிலோ கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுவதுண்டு. சமீபத்தில் இவர் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கே கூடியிருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த அளவிற்கு அவர் பிரபலமாக இருந்து வருகிறார்.
இவரைப் போலவே, இவரது நண்பர் விஜயகுமார் என்பவரும் ஏராளமான நகைகளை அணியும் பழக்கம் கொண்டுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த இவர், கழுத்து மற்றும் கைகளில் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு டெல்லிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை வருமான வரித்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அணிந்திருந்த ஒரு கிலோ நகைகளுக்குக் கணக்குக் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த சோதனையில், விஜயகுமாரின் செல்போனில் சூர்யாவின் படம் மற்றும் செல்போன் எண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் வருமான வரித் துறையினர் சூர்யாவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர் அணிந்திருந்த நகைகள் கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதனையறிந்த வருமான வரித்துறையினர் அதிர்ச்சியாகியுள்ளனர். இந்நிலையில், இவற்றைத் தங்க நகைகள் என்று சோதனையிட வந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
