விநாயகருக்கு மிகவும் விருப்பமான பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. அருகம்புல்லை விநாயகரின் தலையின் மீது வைத்து வழிபட்டால், அவரது உடனடியாக மனம் குளிர்ந்து, பக்தர்களின் வேண்டுதல்களை தந்தருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் அருகம்புல்லை ஏன் விநாயகருக்கு 21 என்ற எண்ணிக்கையில் பக்தர்கள் படைக்கிறார்கள்? நம்முடைய பாரம்பரிய வழிபாட்டு முறையிலும் 21 அருகம்புல் படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்? 21 அருகம்புல் படைத்து விநாயகரை வழிபடுவதன் சிறப்பு என்ன? 21 என்ற எண்ணிக்கை எதை குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகருக்கு உரிய வழிபாட்டு நாட்களிலும் அருகம்புல் படைத்து வழிபட வேண்டும். அப்படி படைக்கும் அருகம்புல்லை ஏதோ பெயருக்கு படைக்கக் கூடாது. 21 என்ற எண்ணிக்கையிலேயே முடிச்சாக கட்டி படைக்க வேண்டும் என நம்முடைய பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன 21 எண்ணிக்கை கணக்கு என நீங்கள் யோசிக்கலாம். விநாயகருக்கு படைக்கும் அருகம்புல் 21 எண்ணிக்கையில் படைப்பது சாதாரண எண்ணிக்கை கணக்கு எல்ல. அதற்கு பின்னால் ஆழமான ஆன்மீக மற்றும் பாரம்பரிய காரணம் உள்ளது.
விநாயகருக்கு அருகம்புல் பிடிக்க காரணம் :
புராணங்களின் படி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் பிடிப்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை இந்திரன், விநாயகரை வழிபட்டு, அருகம்புல் மாலையால் அர்ச்சனை செய்ததாகவும் அதன் பிறகு விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிரியமானதாக மாறி விட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. மற்றொரு புராணக் கதையின் படி, அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் எரித்து அழித்த போது ஏற்பட்ட கடுமையான உடல் வெப்பம் மற்றும் வயிற்று எரிச்சலைத் தணிக்க கஷ்யப முனிவர் அருகம்புல்லை படைத்ததால் அதன் குளிர்ச்சியால் விநாயகர் மனம் மகிழ்ந்ததாகவும், அதனால் அருகம்புல் விநாயகருக்கு பிடித்தமானதாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
அருகம்புல் சிறப்பு :
அருகம்புல் மிகவும் குளிர்ச்சியான தன்மையுடையது. இது மன அமைதி, உடல் நலம் மற்றும் வளத்தை உடையதாக கருதப்படுகிறது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டால் துன்பங்கள், தடைகள் அனைத்தும் விலகி, விநாயகப் பெருமானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அருகம்புல் விநாயகரின் ஆசியை பெறச் செய்கிறது. வாழ்வில் வரும் தடைகளை நீக்கி, அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்க செய்யும் என்று நம்பப்படுகிறது.
21 அருகம்புல் படைக்க காரணம் :
21 என்பது முழுமை, வெற்றி, நிறைவு என்பதை குறிக்கும். இது 5 ஞானளேந்திரியங்கள், 4 வேத தத்துவங்கள், ஒரே பரம்பொருள் என்பதை குறிக்கிறது. அனலாசுரனை வதம் செய்த போது அதன் வெப்பம் தாங்க முடியாமல் விநாயகர் தவித்தார். சந்திரனைத் தலையில் சூடியும், கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தும் விநாயகரின் உடல் வெப்பம் தணியவில்லை. அப்போது முனிவர்கள் 21 அருகம்புற்களை எடுத்து விநாயகரின் தலையிலும், வயிற்றிலும் வைக்க, அவரது உடல் சூடு உடனடியாக குறைந்து குளிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் 21 என்ற எண்ணிக்கையில் அருகம்புல் படைத்து தன்னை வழிபடுபவர்களின் குறைகளை நீக்கி, அருள்வதாக விநாயகப் பெருமான் வரம் அளித்தார். இதனால் விநாயகரின் அருளை உடனடியாக பெற விரும்புபவர்கள் விநாயகருக்கு 21 என்ற எண்ணிக்கையில் அருகம்புல் படைத்து வழிபடலாம்.
எப்படி படைக்க வேண்டும்?
21 என்ற எண்ணிக்கையில் சரியாக அருகம்புல் படைக்க முடியவில்லை என்பவர்கள் 21 முடிச்சுக்கள் கொண்டதாக அருகம்புல்லை மாலையாக கட்டி, விநாயகருக்கு அணிக்கலாம். அதே போல் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் போது விநாயகருக்கு படைக்க வேண்டிய 21 இலைகள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக அருகம்புல்லை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடலாம்.
Source link
