மதுரை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன், இன்று சசிகலா கட்சியில்

மதுரை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன், இன்று சசிகலா கட்சியில் சேர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த அய்யப்பன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ன் தீவிர ஆதரவாளர். சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ கணக்கில் இருந்த அய்யப்பன், முதல்வர் ஸ்டாலினே நெளியும் வகையில் அவரது புகழ்பாடினார்.

இதைதொடர்ந்து திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்தபோது அய்யப்பனும் சேர்ந்தார். உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் தனக்கு ‘சீட்’ தரப்படும் எனக்கருதி அய்யப்பன் காத்திருந்த நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

நேற்று ‘காலாவதியான’ அதிமுக தொண்டர் மீட்பு குழுவை சேர்ந்த சில ஆதரவாளர்களுடன் செக்கானுாரணி அருகே ஆ.கொக்குளத்தில் உள்ள தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ஓபிஎஸ் உடன் கடைசி வரை கூட இருந்த எனக்கு கை கொடுப்பார் என நம்பி இருந்தேன். அவர் கைவிட்டு விட்டார். நான்கரை ஆண்டுகளாக அவரோடு இணைந்து செயல்பட்டு வருகிறேன். தி.மு.க.,வில் இணையும் போது உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக்கேட்டேன். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால் எனக்கு ‘சீட்’ கொடுக்காமல் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு உசிலம்பட்டி ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ் ஒரு கேப்டனாக தொண்டனை கரை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் கரை சேர்க்க தவறிவிட்டார். திமுகவில் தேர்தல் பணியாற்ற இதுவரை உத்தரவு வரவில்லை. தொண்டர்களோடு ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பேன்.இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், அய்யப்பன் இன்று சசிகலாவை சந்தித்து அவரது கட்சியில் இணைந்து உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

சசிகலா இன்று அறிவித்த 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் உசிலம்பட்டி தொகுதியில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

Source link