LPG Cylinder Booking New Rule,சிலிண்டர் புக்கிங் ரூல்ஸ் மாறிடுச்சு: பொதுமக்கள் கவனத்துக்கு – அரசு முக்கிய அறிவிப்பு – lpg cylinder booking rules have changed check this important updates before book a cylinder

புதிய 25 நாள் முன்பதிவு இடைவெளியானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உள்நாட்டு எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அப்டேட்.

கேஸ் சிலிண்டர் – முக்கிய அறிவிப்பு!

வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்வதற்கான காத்திருப்பு காலம் 45 நாட்களிலிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு கிராமப்புறங்களில் உள்ள நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 25 நாள் முன்பதிவு இடைவெளி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உள்நாட்டு சமையல் சிலிண்டர்நுகர்வோருக்கும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

முன்பதிவு இடைவெளி எதற்காகக் கொண்டுவரப்பட்டது?

மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட அழுத்தத்தைக் சமாளிப்பதற்காக, நுகர்வோர் தேவையை நிர்வகிக்கும் தற்காலிக நடவடிக்கையாக மத்திய அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெவ்வேறு முன்பதிவு இடைவெளிகளை அறிமுகப்படுத்தியது. 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பெட்ரோலியத்துறை அமைச்சகம் நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களாகவும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களாகவும் முன்பதிவு இடைவெளியை நிர்ணயித்திருந்தது.

LPG நுகர்வோருக்கு என்ன மாற்றங்கள்?

இந்நிலையில், தற்போது எரிவாயு விநியோக நிலை சீரடைந்துள்ளதாலும், சிலிண்டர் விநியோகத் தேக்க நிலை கணிசமாகக் குறைந்துள்ளதாலும் இந்த ஏற்பாட்டை அரசு திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட விதியின்படி, நகர்ப்புறமா அல்லது கிராமப்புறமா என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து உள்நாட்டு சமையல் சிலிண்டர் நுகர்வோரும் 25 நாட்களுக்குப் பிறகு தங்களது அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அரசு வெளியிட்ட உத்தரவு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இந்த புதிய விதியை உடனடியாக அமல்படுத்துமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஏன் இந்த முடிவு?

கிராமப்புற நுகர்வோரைப் பொறுத்தவரையில், அதிகபட்ச முன்பதிவு இடைவெளி இதன் மூலம் 20 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. தேவை மேலாண்மை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய எரிவாயு விநியோக நிலை மற்றும் சிலிண்டர் விநியோகத் தேக்க நிலை ஆகியவற்றைக் ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதான் அரசின் நோக்கம்!

உள்நாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதும், விநியோகத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான இடையூறுகளை எதிர்கொள்ளும் நாட்டின் திறனை மேம்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். தற்போது எரிவாயு விநியோக நிலை மேம்பட்டுள்ளதால், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள உள்நாட்டு நுகர்வோருக்கான முன்பதிவு இடைவெளியை அரசு பொதுவான 25 நாள் அட்டவணைக்குக் கொண்டுவந்துள்ளது.

புக்கிங் செய்வது எப்படி?

சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்ய நிறைய வழிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப், மிஸ்டு கால், யூபிஐ ஆப், போன் கால் போன்ற பல வசதிகள் உள்ளன. உங்கள் வசதிக்கு ஏற்ப கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்:

வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு!

இண்டேன் (Indane Gas) வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7588888824 என்ற எண்ணிற்கு ‘REFILL’ அல்லது ‘BOOK’ என அனுப்ப வேண்டும். எச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளர்கள் 92222 01122 என்ற எண்ணிற்கு ‘Hi’ அல்லது ‘Book’ என அனுப்பி முன்பதிவு செய்யலாம். பாரத் கேஸ் (Bharat Gas) வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

மிஸ்டு கால் மூலம் முன்பதிவு!

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் நாடு முழுவதும் ஒரே மாதிரி மிஸ்டு கால் சேவை எண்ணை வழங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 7718955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் உங்கள் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படும்.

போன் கால் / IVRS முறை!

அந்தந்த எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களை அழைத்து, குரல் வழிகாட்டுதலின்படி (IVRS) உங்கள் நுகர்வோர் எண் (Consumer ID) அல்லது தொலைபேசி எண்களை உள்ளிட்டு புக்கிங் செய்யலாம்.

யூபிஐ செயலிகள் மூலம் முன்பதிவு!

வாடிக்கையாளர்கள் Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகளில் உள்ள ‘Book Gas Cylinder’ என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் கேஸ் விநியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடியை உள்ளிட்டு ஆன்லைன் மூலமாகவே பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிகள்!

www.mylpg.in என்ற பொதுவான வலைத்தளம் மூலமாகவும் அல்லது அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் (LPG Apps) மூலமாகவும் லாகின் செய்து புக் செய்யலாம். தற்போது பெரும்பாலான மக்கள் கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாகவும், மிஸ்டு கால் சேவை மூலமாகவும்தான் சிலிண்டர் முன்பதிவு செய்கின்றனர்.

OTP விதிமுறை!

சிலிண்டர் டெலிவரி செய்யும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக DAC (Delivery Authentication Code) எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ரகசிய எண் (OTP) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். சிலிண்டர் டெலிவரி செய்ய வருபவரிடம் இந்த எண்ணைக் காண்பிப்பதன் மூலமாக மட்டுமே சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிலிண்டர் விலை நிலவரம்!

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் மாதாந்திர விலை திருத்தத்தின்படி, வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. சென்னையில் இதன் விலை ரூ.10.50 அதிகரித்து, ரூ.2,916.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேநேரம், நடுத்தர மக்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து 957.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலைகளிலும் மாற்றமின்றி பழைய விலையே தொடர்கிறது.

Source link