மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லாலும் மம்மூட்டியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‘பேட்ரியாட்’. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆண்டோ ஜோசப், கே ஜி அனில் குமார் தயாரித்திருக்க ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகியிருந்தது. கமல்ஹாசன் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். டாக்டராக மம்மூட்டியும் கர்னலாக மோகன்லாலும் ஒரு சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக போராடிய பிறகு வேறு எந்த ஆபரேஷனிலும் ஈடுபடாமல் இருந்த சூழலில் காலத்தின் தேவையால் மீண்டும் ஒரு ஆபரேஷனுக்கு இணைகின்றனர். அது வெற்றிகரமாக முடிந்ததா என்ற கேள்வியை டீசர் எழுப்பியிருந்தது.
டீசரை தொடர்ந்து படத்தின் செகண்ட் லுக் கடந்த பிப்ரவரியில் வெளியானது. மோகன் லால், மம்மூட்டி, குஞ்சாக்கோ போபன் மூவரும் காரில் எதிரிகளை சேஸ் செய்யும் வகையில் அந்த போஸ்டர் அமைந்திருந்தது. அதில் ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தில் இருந்து ‘காற்று தொட்டபோது’ என்ற பாடல் வெளியாகியிருந்தது. இதில் குஞ்சாக்கோ போபன் மற்றும் தர்ஷனா இருவரது காதலை விவரிக்கும் பாடலாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 23ஆம் தேதியில் இருந்து மே 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கான காரணத்தை படக்குழு சொல்லவில்லை. ஆனால் மே 21ஆம் தேதி மோகன்லால் பிறந்தநாள் காண்கிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள த்ரிஷ்யம் 3 படமும் முதலில் ஏப்ரல் 2ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு பின்பு மே 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் அதுவும் மோகன்லாலின் பிறந்தநாளில் அவரது இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
#Patriot In Cinemas Worldwide from May 01, 2026 pic.twitter.com/MR7sq8qU9I
— Mohanlal (@Mohanlal) April 1, 2026
