மிசா கொடுமைகள்: மு.க.ஸ்டாலின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தி விட்டார்- எ.வ.வேலு – ev velu criticizes tamil nadu cm vijay for misa remarks against mk stalin

மிசா சட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தை இன்றைய தினம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் மீதான அடக்குமுறைகளை உருவ கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் நடந்து கொண்டது சரியா? என்ற வாதம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேச அனுமதிக்குமாறு நேற்றைய தினமே எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அனுமதி தரவில்லை. இதனால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். இன்றைய தினம் சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதி கேட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

இதையடுத்து பேசிய எ.வ.வேலு அவர்கள், முதலமைச்சர் பேசியதை முழுவதுமாக அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவர் கறாராக கூறிவிட்டார். பின்னர் திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடுதல், பேரவையில் தர்ணா ஆகிய நிகழ்வுகளை தொடர்ந்து பேரவைத் தலைவர் உத்தரவின்படி, அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, மிசாவை பற்றிய முதலமைச்சர் விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதால் அவருக்கே உரித்தான பாடி லாங்வேஜ் எல்லாம் செய்தார்.

விசில் புரட்சி செய்து சாதனை படைத்துள்ளார் CM விஜய்! சபாநாயகர் பேச்சு

மிசா கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின்

மிசா என்பது ஜனநாயக கொடுமை. இதுபற்றி மக்கள் அனைவருக்கும் தெரியும். யாரும் பேசக்கூடாது, எழுதக்கூடாது எனக் கடுமையான விதிகள் இருந்தன. 60 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரான என்னுடைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா கொடுமைகளை அனுபவித்தார். அந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக வேதனை தெரிவித்தார். இதுபற்றி மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் பலமுறை பேசியிருக்கின்றனர்.

முன்னாள் நீதியரசர் சந்துரு பேசியது என்ன?

குறிப்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசும் போது, மிசா காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் திமுகவை சேர்ந்த சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் முரசொலி மாறன், சிட்டி பாபு, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்குவர். சென்னை மத்திய சிறையின் 9வது பிளாக்கில் அவர்கள் தாக்கப்பட்டார்கள். இதை சிறை அதிகாரிகள் மறுத்த போது விசாரணை ஆணையம் வெளிக்கொண்டு வந்தது. கைதிகள் தாக்கப்பட்டது உண்மை என்று கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்கள். மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தால் கைது செய்யப்பட்ட விவகாரம் என்பது திமுகவை அச்சுறுத்துவது, அக்கட்சி தலைவரின் குடும்பத்திற்கு மன ரீதியாக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதில் மாற்று கருத்தில்லை. எனவே மிசாவில் உள்ளே வைக்கப்பட்டாரா, இல்லையா என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மிசா கொடுமைகள் – விசாரித்த இஸ்மாயில் ஆணையம்

மிசா சட்டத்தால் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் மீதான வன்முறைகள் குறித்து விசாரிக்க நீதிபதி முகமது இஸ்மாயில் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த ஆணையத்திற்கு உதவியாக பாதிக்கப்பட்ட சிறை கைதிகளிடம் சாட்சியங்களை சேகரிப்பது, வழக்கறிஞராக செயல்படுவது, ஆணையத்திடம் விவரங்களை சமர்பிப்பது போன்ற பணிகளில் சந்துரு ஈடுபட்டார். எனவே பல விஷயங்களை தீர விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டவர். தற்போதைய சூழலில் முன்னாள் நீதியரசர் சந்துருவின் கருத்து பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.

Source link