கோவை: ”தி.மு.க.,- காங்., ஆகிய இரண்டு கட்சிகளுமே, வாரிசு அரசியலின் பூர்வக்குடி” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் பிரசாரம் செய்தார். சிங்காநல்லுார் தொகுதியில் ஹோப்ஸ் அருகே பாலன் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய, அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்வது எளிது; உடனே பற்றிக்கொள்ளும். ஆனால், நாங்கள் அந்த அரசியலை செய்ய மாட்டோம்.
உங்கள் மொழியான தமிழ், உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் என்பது மொழி அல்ல, உயிர். மொழி அழிந்தால் வரலாறு அழியும். இந்த மொழிக்காக காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் போராடியதா? வாரிசு அரசியலின் பூர்வக்குடியே காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கட்சிகள் தான். கருணாநிதிக்கு பிறந்ததால், ஸ்டாலினிற்கு முதல்வர் பதவி; இதுதான் கொடிய சனாதனம்.
தி.மு.க., -காங்., இரண்டுமே கூட்டு களவாணிகள். காவிரி நதி நீரை பறித்தது, காங்கிரஸ், கொடுத்தது தி.மு.க., இதுபோல, ஈழத்தமிழரை அழிக்க ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ், உதவி செய்தது தி.மு.க., பிறமொழி பேசும் இனத்துக்கு, இப்படி நடந்திருந்தால், இந்த இரண்டு கட்சிகளால் ஒரு ஓட்டு வாங்க முடியுமா? நாம் மீண்டும் எழும் வாய்ப்பை இந்த தேர்தல் தந்துள்ளது. சிந்தித்து நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
