புதுடில்லி: காங்கிரசின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்த உடனடியாக பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.
நேற்று முன்தினம் காங்கிரசின் செல்வப்பெருந்தகை, 2 நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனறார். அக்கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக, வேட்புமனு தாக்கலுக்கு கடைசி வரை இழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கள் ஆகியோர் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலுக்கு அக்கட்சி எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவை தொடர்ச்சியாக சாடி வந்த மாணிக்கம் தாகூர், காங்கிரசின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் அளித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் பிரச்னையே இதற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
