வரவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் நிற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இடதுசாரிகள் பங்கேற்க மறுத்துவிட்டனர். இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.
108 என தவெக அரசு மீது முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கு வரும் இடைத்தேர்தல் புதிய நம்பிக்கையை விதைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி செவ்வாய் அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு
இவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படும் எனக் கூறப்படும் நிலையில் தவெக தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க அடுத்த அடியை எடுத்து வைக்குமா? இல்லை அதிமுக தனது கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்குமா? யாரும் எதிர்பாராத வகையில் திமுக எழுச்சி பெறுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது திமுகவில் இருந்து தவெக பக்கம் நகர்ந்த கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பது தான். இவர்கள் ஆதரவின்றி தவெக தனித்து வெற்றி பெறும் எனப் பேசப்பட்டாலும் திராவிட கட்சிகளின் களப் பணிகளை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
விசிக, மதிமுக நிலை என்ன?
போராட்ட களத்தில் நிற்கும் இடதுசாரிகள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து கடந்த 118 நாட்களில் கூட்டணிக்குள் பலமுறை சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக நீட் வினாத்தாள் மோசடி, விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம் போன்ற விஷயங்களில் ஆளும் தவெக அரசிற்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகள் இந்த ஆட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு தொடரும் என்று கூறினாலும், பல சமயங்களில் நெருக்கடி தரும் வகையில் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். இவற்றை ஆளும் அரசு திறம்பட சமாளித்தாலும் அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க இயலாது.
விசிக ஆதரவு நிலைப்பாடு மாறுமா?
காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் முழு மூச்சாக தவெக அரசை ஆதரிக்கும் நிலையில் இருக்கின்றன. தவெக அரசை பெரிதும் வரவேற்று திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்ட போதாமையை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்து வந்தாலும், முதலமைச்சர் விஜய்யின் பேச்சும், சட்டப்பேரவையில் அமைச்சர்களின் எதிர்வினைகளும் விசிக தலைவர் திருமாவளவனிற்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. நாளைய தினம் தவெக தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளவில்லை என்று இடதுசாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
2 தொகுதிகள் இடைத்தேர்தல் – முடிவுகள் யாருக்கு சாதகம்?
எனவே வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வரவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெகவிற்கு விசிக, இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்குமா, ஆட்சிக்கு வெளியில் இருந்து மட்டும் ஆதரவு எனக் கூறி தேர்தல் களத்தில் பார்வையாளர்களாக மட்டும் நிற்பார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன. தற்போதைய சூழலில் தவெக கூட்டணி கணக்குகள் சில குழப்பங்கள் நிலவி வருகின்றன. அது இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை வரும் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று தெரிந்துவிடும்.
Source link
