தூத்துக்குடி: திமுக தேர்தல் வாக்குறுதியை தந்தால், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது என

தூத்துக்குடி: திமுக தேர்தல் வாக்குறுதியை தந்தால், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது என கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.

தூத்துக்குடியில் திமுக, வேட்பாளரான அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

நாடு முழுதும் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. விலை ஏற்றத்தால் சிலிண்டரை வாங்கியும் எந்த வித லாபமும் இல்லாமல், வியாபாரிகள் தொழிலை நடத்துவதற்கே கடினமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஆனால், மத்திய பாஜ அரசு அப்படி எதுவுமே நடக்கவில்லை என சொல்லிக்கொண்டே இருக்கிறது. போர்ச்சூழலை கணக்கில் கொண்டு, எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சி, பெண்களுக்கான அரசாகவும் பெண்களை உயர்த்தக்கூடிய அரசாகவும் இருக்கிறது. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் திரும்பி கூட பார்க்கவில்லை. எந்த வாக்குறுதியை திமுக தந்தாலும், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.

பாஜ ஆளும் மாநிலங்களை விட, நிச்சயமாக தமிழகத்தில் குற்றங்கள் குறைவாக உள்ளது. அவர்கள் கூட்டணியில் உள்ளவர்கள் தவறு செய்தவர்களை எவ்வாறு காப்பாற்றினர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது குற்றம் செய்யக் கூடியவர்களுக்கு எப்படி மிக விரைந்து தண்டனை கொடுக்கப்படுகிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link