மேக்ஸ்வெல் நீக்கம்: வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து மேக்ஸ்வெல் நீக்கப்பட்டார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில், 2026-27 சீசனுக்கான 21 பேர் கொண்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியல் வெளியானது. இதில், டெஸ்ட் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் ‘ஆல்-ரவுண்டர்’ மேக்ஸ்வெல் 37, இடம் பெறவில்லை. இதுவரை 7 டெஸ்டில் (8 விக்.,) மட்டும் பங்கேற்ற இவர், கடைசியாக 2017ல் டெஸ்டில் (எதிர்: வங்கம்) விளையாடினார். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பையில் பெரிய அளவில் சோபிக்காத இவர், ‘டி-20’ அணியிலும் இடம் பெறுவது சந்தேகம்.

துவக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ், மாத்யூ ரென்ஷா, ஜெய் ரிச்சர்ட்சன், லான்ஸ் மோரிஸ், மாத்யூ ஷார்ட் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.

சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பி மீண்டும் இடம் பிடித்தார். துவக்க வீரர் ஜாக் வெதரால்டு, வேகப்பந்துவீச்சாளர் பிரண்டன் டாக்கெட், முதன்முறையாக இடம் பெற்றனர்.

ஆஸி., ஒப்பந்த பட்டியல்: சேவியர் பார்ட்லட், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், பிரண்டன் டாக்கெட், நாதன் எல்லிஸ், கேமிரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாத்யூ குனேமன், மார்னஸ் லபுசேன், நாதன் லியான், மிட்சல் மார்ஷ், டாட் மர்பி, மைக்கேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், ஜேக் வெதரால்டு, பியூ வெப்ஸ்டர், ஆடம் ஜாம்பா.

Source link