50 வருடங்களாக தொடரும் சர்க்காரியா ஆணைய சர்ச்சை..! எதற்காக அமைக்கப்பட்டது..? இறுதியில் என்ன ஆனது..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவை தொடங்கிய அவர், திமுக அரசு மீது தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கல்யாணசுந்தரமும் இணைந்தார். 1972-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியை நேரில் சந்தித்து, திமுக அரசின் ஊழல்கள் என கூறி 32 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை அளித்தனர்.

அந்தப் புகார் மனு பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது குறித்து விளக்கம் கேட்டு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பப்பட்டது. முதலமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் விரிவான விளக்கமளித்ததோடு, சட்டமன்றத்தில் அதனை ஒரு சிறு புத்தகமாகவும் வெளியிட்டார். அப்போது மத்திய அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசரநிலையை (Emergency) பிரகடனம் செய்தார். அதனை திமுக அரசு கடுமையாக எதிர்த்த நிலையில், 1976 தொடக்கத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1972-ல் எம்.ஜி.ஆர் மற்றும் கல்யாணசுந்தரம் கொடுத்த புகார்களை விசாரிக்க, 1976 பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

திமுக மீது வைக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகளை சர்க்காரியா ஆணையம் தீவிரமாக விசாரித்தது. இறுதியில், 7 குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே முகாந்திரம்/ஆதாரம் இருப்பதாகவும், மற்ற குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஆணையம் சமர்ப்பித்தது. குறிப்பாக, அரசியல் மேடைகளில் காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் ‘விஞ்ஞான ஊழல்’ என்ற வார்த்தை சர்க்காரியா ஆணைய அறிக்கையில் எங்குமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணைய அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் பொறுப்பு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. 1977-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது எம்.ஜி.ஆர் ஆஜராகி, புகார்கள் குறித்து தனக்கு எதுவும் நேரடியாக தெரியாது என்றும், சேலம் கண்ணன் என்ற வழக்கறிஞர் அளித்த விவரங்களின் அடிப்படையிலேயே மனு அளித்ததாகவும் தெரிவித்ததால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் சிபிஐ திணறியது.

சிபிஐ தரப்பால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான வலுவான சாட்சியங்களையோ ஆவணங்களையோ சமர்ப்பிக்க முடியாத காரணத்தால், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்யப்பட்டு கைவிடப்பட்டன. அதன்பின் 1984-ல் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோதும் கூட இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. இதன்மூலம், 50 ஆண்டுகளை கடந்தும் அரசியல் களத்தில் பேசப்படும் சர்க்காரியா ஆணையத்தின் புகார்கள், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளாகவே வரலாற்று பக்கங்களில் நிலைத்துவிட்டன.

தங்கத்தை போல செம்பு விலை வரலாறு காணாத உச்சம்!. என்ன காரணம்?

Source link