புதுடில்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள்

புதுடில்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதித்தால், டில்லியில் 1 லிட்டர் டீசல் விலை 193 ரூபாய்க்கும், 1 லிட்டர் பெட்ரோல் விலை 119 ரூபாய்க்கும் விற்கும் நிலை ஏற்படும்.

எனினும், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால், விலை உயர்வு சுமையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Image 1557248

அனுமதி

மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக போர் தொடுத்துள்ளன.

ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் போர் பதற்றத்தால், எண்ணெய் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக திகழும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டுமே அப்பகுதியை கடந்து செல்ல ஈரான் அனுமதித்து வருகிறது.

இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில், பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும் நோக்கில், பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ரஷ்யா, ஈரான் போன்ற எண்ணெய் வளமிக்க நாடுகளிடம் நம் நாடு நட்பு பாராட்டி வருவதால், எரிசக்திக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அதே சமயம், சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் சூழலுக்கு நம் நாடும் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் கேட்டுக் கொண்டதால், நுகர்வோர் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அளித்த விளக்கம்:

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமை

சர்வதேச விலை உயர்வை அப்படியே நுகர்வோர் மீது சுமத்தினால், டில்லியில் 1 லிட்டர் டீசல் விலை 106 ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 193 ரூபாய்க்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை அதிகரித்து, 119 ரூபாய்க்கும் விற்கப்படலாம்.

கடந்த ஒரு மாதத்தில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் 100 சதவீதம் வரை உயர்ந்த போதிலும், நுகர்வோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால், அந்த சுமையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 24.40 ரூபாயும், டீசலுக்கு 104.99 ரூபாய் என்ற அளவிலும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்கு பின்ஈரான் பெட்ரோல்

அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதாக கூறி கடந்த 2019ல் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால், ஈரான் மீது ஐ.நா., வாயிலாக பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நாம் நிறுத்திஇருந்தோம். போர் சூழலால், 30 நாட்களுக்கு தடையில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்தது. இதை பயன்படுத்தி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நம் நாடு உடனடியாக ஒப்பந்தம் போட்டது. அதன் விளைவாக 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, ஈரானில் இருந்து ‘பிங் ஷுன்’ என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டுள்ளது. நாளை மறுநாள், குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை இந்த கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link