புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற லோக்சபா தொகுதிகளை 816 ஆக உயர்த்தும் முக்கியமான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால், பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜன., 28ல் துவங்கிய நிலையில், இரு அமர்வுகளாக நடத்தப்பட்டு, இன்றுடன் முடிவடைகிறது. லோக்சபாவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 273 ஆக அதிகரித்து 816 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக அரசியல் சாசன திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவையும் பார்லி.,யில் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில், புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற விதி இருந்தது.
ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல், 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த இரு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஒருவேளை பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டால், இன்று இரு சபைகளும் மீண்டும் கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்திவைக்கப்படும். பின்னர் இம்மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பார்லி., மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவுக்கு பார்லி.,யின் இரு சபைகளிலும் ஒப்புதல் கொடுக்கப்பட்டால், 2029, மார்ச் 31ல் இச்சட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம் அடுத்த லோக்சபா தேர்தல் மற்றும் 2029 சட்டசபை தேர்தலை சந்திக்கும் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
