– நமது டில்லி நிருபர் -: வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும், என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களை

– நமது டில்லி நிருபர் -:

வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும், என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த வகை செய்யும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் செய்த அமளியால், லோக்சபாவில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்துவ அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதாலும், கேரள சட்டசபை தேர்தல் களத்தில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாலும், மசோதா நிறைவேற்றம் மேலும் தள்ளிப் போயுள்ளது. நாடு முழுதும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் இயங்கும் நிலையில், அவற்றுக்கான நிதி, வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பெறப்படுகிறது. இந்த நிதியின் பயன்பாடு, அவற்றை கையாளும் முறை, அந்த தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் என, பல்வேறு விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

குற்றச்சாட்டு

இதை முறைப்படுத்த, ஏற்கனவே இருக்கும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, அதில், முக்கிய திருத்தங்களும் இடம் பெற்றன. இவை, எதிர்க்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை குறிவைத்தே, இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. குறிப்பாக, ஏராளமான கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளாவில், வரும் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.

இது, சிறுபான்மையினரின் உரிமைகளை கட்டுப்படுத்துவதோடு, தன்னார்வ நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதனால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை கொண்டு வர வேண்டாம் என, கேரள பா.ஜ., தலைவர்களிடமிருந்தே டில்லி தலைமைக்கு அழுத்தம் வந்துள்ளது. ஆனாலும், லோக்சபாவின் நேற்றைய அலுவல் பட்டியலில், இந்த மசோதா மீதான விவாதம் மற்றும் நிறைவேற்றம் குறித்த தகவல் இடம் பெற்றன.

பார்லி.,யில் அலுவல்கள் துவங்குவதற்கு முன், மகர் துவார் நுழைவாயிலில் காங்., – இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ டுபட்டனர். பின், லோக்சபா கூடியதும் கேள்வி நேரத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் இறங்கினர். அப்போது, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு பேசியதாவது:

கேரள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, ஓட்டு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அமளி செய்கின்றன; மத்திய அரசின் மீது தவறான பிம்பத்தை கட்டி எழுப்ப முயல்கின் றன.

ஏற்க முடியாது

எந்தவொரு மதத்தையோ, நிறுவனத்தையோ குறிவைத்து, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவில்லை. நாட்டின் பாதுகாப்பு, நலனை கருதியே இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில், எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போதும் அமளி அடங்காததால், மசோதாவை நிறைவேற்ற முடியாமல் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

ஆந்திர தலைநகர் அமராவதி

மசோதா நிறைவேற்றம்

லோக்சபா மதியம் கூடியதும், அமராவதி மாவட்டத்தை ஆந்திராவின் ஒரே தலைநகராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வழிவகை செய்யும், ‘ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா – 2026’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, இறுதியாக குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. பெரும்பாலான கட்சிகளின் எம்.பி.,க்கள் இம்மசோதாவுக்கு ஆதரவளித்தாலும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., – எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திருநங்கையர் உரிமைகள் திருத்த

மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பார்லி.,யின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே, திருநங்கையர் உரிமைகள் திருத்த மசோதா – 2026 சமீபத்தில் நிறைவேறியது. இதன்படி, திருநங்கையருக்கு காயம் ஏற்படுத்துதல் அல்லது உடல் ரீதியான பாதிப்புகளை விளைவிப்பவர்களுக்கு, குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். ஒரு நபர் திருநங்கையா இல்லையா என்பதை தீர்மானிக்க, ஒரு அதிகாரப்பூர்வக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி இந்த தகுதி சான்றிதழ் மூலமே அரசு சலுகைகளை பெற முடியும். இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை

திருத்த மசோதாவின் முக்கியம்சங்கள்

ஒரு தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ, காலாவதியானாலோ அல்லது அவர்களாகவே முன்வந்து ஒப்படைத்தாலோ, அந்த அமைப்பு வெளிநாட்டு நிதி மூலம் வாங்கிய நிலம், கட்டடங்கள் மற்றும் இதர சொத்துகள் அனைத்தையும், அரசு நியமிக்கும் ஒரு குறிப்பிட்ட அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை, அரசு தன் துறைகளுக்கு மாற்றலாம் அல்லது அவற்றை விற்று அந்த பணத்தை இந்திய ஒருங்கிணைந்த நிதியில் சேர்த்து கொள்ளலாம் உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால், அந்த அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவதற்கோ அல்லது பெறுவதற்கோ உடனடியாக தடை விதிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறியதாக ஒரு அமைப்பு மீது விசாரணை நடத்த வேண்டுமானால், அதற்கு மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Source link