சென்னை: “விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு, எவ்வித

சென்னை: “விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு, எவ்வித உள்நோக்கமும் இல்லை,” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காததால், கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, ஆளூர் ஷாநவாசுக்கு வாய்ப்பு அளிக்காதது, திருமாவளவன் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நேற்று திருமாவளவன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

வி.சி.க., – எம்.எல்.ஏ., க்கள் மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து, பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. நாகையில் போட்டியிட, ஆளூர் ஷாநவாஸ் விரும்பவில்லை; ராயபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பி, பின் வேண்டாமென மறுத்து விட்டார்.

பல்லாவரத்தில் போட்டியிட விரும்பினார்; அது கூட்டணி கட்சிக்கு சென்றது. பல்லாவரம் கிடைத்திருந்தால், ஆளூர் ஷாநவாஸ் வேட்பாளராக இருந்திருப்பார்.

மூவருக்கும் வாய்ப்பு அளிக்காததில், எவ்வித உள்நோக்கமும் இல்லை. சிறப்பாக பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில், மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு தந்திருக்க வேண்டும் என்பதில், நியாயம் இருக்கிறது.

தொடர்ந்து என்னிடம் ‘சீட்’ கேட்டுக்கொண்டே இருக்கும்போது, பதில் சொல்லாமல், முகத்தை திருப்பி இருப்பேன்; மன அழுத்தத்தோடு இருந்திருப்பேன்.

இவை, எனக்கு இருக்கும் நெருக்கடி. வி.சி.க.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி இருந்தால், 10 தொகுதிகளை முன்னணி நிர்வாகிகளுக்கு கொடுத்திருக்க முடியும். எம்.எல்.ஏ.,க்கள் மூவரும் என்னிடம் வந்து வேதனைகளை, வருத்தத்தை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘எதுவாயினும் ஏற்கிறோம்’

ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘சமூக வலைதளங்களில், எனக்கு ஆதரவாக கருத்து பரிமாறிய அனைவருக்கும் நன்றி. ஒரு கட்சியில் யாருக்கு எப்போது, எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது, கட்சி தலைமை எடுக்கும் முடிவு. எதுவாயினும், அதை ஏற்றுக்கொள்வதே சிறந்த அறம். ‘திருமாவளவன் உட்பட எட்டு பேரும் வென்று, சட்டசபையில் வி.சி.க., குரல் வலுவாக ஒலிக்க, ஒருங்கிணைந்து பாடுபடுவோம். நான், எம்.எல்.ஏ.,வாக பணியாற்றியதை விட, வீரியத்துடன் அரசியல் களத்தில் பணியாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார். பாலாஜி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘என் தொகுதியில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். வி.சி.க., – எம்.எல்.ஏ., எப்படி செயல்படுவார் என்பதை மக்கள் உணர்ந்திருப்பர். திருமாவளவன் வழியில் என்றும் பயணிப்பேன்’ என கூறியுள்ளார்.

Source link