உணவு உற்பத்திக்கே சிக்கலா? தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றம்.. பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு – tamil nadu urban and town planning amendment bill passed poovulagin nanbargal oppose it

கிட்டத்தட்ட 28 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழக அரசு 13 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தியதுடன், 8 அரசு தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது. மேலும், விதி 110-ன் கீழ்முதலமைச்சர் விஜய் 17 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில், சட்டப்பேரவையின் இறுதி நாளில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

என்ன மாற்றம் கொண்டுவரப்படுகிறது?

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் இந்தச் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், நஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டஆட்சியரிடம் முன் அனுமதி பெறும் நடைமுறையை நீக்கவும், நிலப் பயன்பாடு தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருந்த முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகரமைப்பு இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசியிருந்தார். அவரைப் போலவே பாமக உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியருக்கு நிலங்களின் தன்மை மற்றும் விவரங்கள் குறித்து தெளிவான தகவல்கள் இருப்பதால், இந்தத் திருத்தத்தின் மூலம் நஞ்சை மற்றும் விவசாய நிலங்களை எளிதாக வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடியும் எனக் கவலை தெரிவித்தனர்.

பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு

அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்களும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சுந்தர்ராஜன் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு அமைப்பின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலங்கள் மீதான உள்ளாட்சிஅமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்து, அவற்றை மாநில அளவில் குவிக்கும் முயற்சியாக இந்தத் திருத்தம் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“விவசாய நிலங்கள் எளிதில் மாற்றப்படலாம்”

வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை மிக எளிதாக வேறு பயன்பாட்டுக்கு மாற்றும் வகையில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பான 2017ஆம் ஆண்டு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துடனும், தற்போதைய சட்டத் திருத்தத்தை இணைத்துப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு திருத்தங்களின் மூலம், தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பாக நகரமைப்பு இயக்குநரிடம் அதிகப்படியான அதிகாரம் குவிக்கப்படுவதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறையின் ஒப்புதல் இல்லாமலேயே நிலப் பயன்பாட்டை மாற்றுவதற்கு இந்தத் திருத்தம் வழிவகுக்கும் என்றும் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

உணவு உற்பத்தி பாதிக்கப்படுமா?

விவசாய நிலங்கள் அதிக அளவில் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டால், தமிழகத்தின் விவசாய நிலப்பரப்பு குறைந்து, எதிர்காலத்தில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.இதனால், இந்தச் சட்டம் மற்றும் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் வலியுறுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புது Rules உடன் TVk ! நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடி | இதுதான் விஷயமா?

இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் பூவுலகு தளத்தில் வெளியிடப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Source link