மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ விமானம் கிரிமியாவில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 29 பேர் பலியாகினர்.
சோவியத் யூனியன் காலத்தில் தயாரிக்கப்பட்ட ‘ஏ.என்., 26’ ரக ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, 7 பணியாளர்கள் மற்றும் 23 பயணியருடன் கிரிமியா நோக்கி சென்றது. இந்த பகுதியை, 2014ல் உக்ரைனிடமிருந்து ரஷ்யா இணைத்துக் கொண்டது.
கிரிமியா வழியாக நேற்று முன்தினம் சென்ற ராணுவ போக்குவரத்து விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் விமானம் ஒரு உயரமான மலைப்பாறையில் மோதி நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விமானத்தில் பயணித்தவர்களில், 29 பேர் உயிரிழந்துள்ளனர்; ஒருவரது நிலைமை தெரியவில்லை. இது உக்ரைன் தாக்குதல் அல்ல என்றும் தொழில்நுட்ப கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
