புதுடில்லி: டில்லி அரசின் மின்சார வாகனக் கொள்கை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசு போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி கூறியதாவது:
கடந்த, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆம் ஆத்மி அரசால் மின்சார வாகன கொள்கை உருவாக்கப்பட்டது. புகை கக்கும் வாக னங்களால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு அமல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன் பின், இந்தக் கொள்கை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக பிறப்பித்த உத்தரவில், 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, மின்சார வாகனக் கொள்கையை மேலும் மூன்று மாதங்கள் அல்லது புதிய கொள்கை அறிவிக்கும் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி அரசின், ‘மின்சார வாகனக் கொள்கை 2.0’ வரைவு இறுதி நிலையில் உள்ளது. விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
