விஜய் தலைமையில் இன்று கூடும் தவெக ஆதரவு கட்சிகள்: கம்யூனிஸ்டுகள் விலகல் – அடுத்தது என்ன? – tvk support parties to hold meeting under vijay today as communists stay away what happens next

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. கூட்டத்தில் கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்புக் குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தவெக கூட்டணியில் இடம்பெறுவதாக எதிர்பார்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. விஜய் தலைமையிலான கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதனால், இன்றைய கூட்டத்தில் விஜய் தலைமையிலான தவெக எத்தகைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கூட்டணிக் கட்சிகளுடனான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுடன் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணிக்கு பெயர், ஒருங்கிணைப்புக் குழு?

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைப்பது, ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக்கு ‘தமிழக வெற்றி கூட்டணி’ என பெயர் வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தவெக அணியில் இணையும் மதிமுக? இது தான் அடுத்த நகர்வு?

அதேபோல், கூட்டணியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கு தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாகவே கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்துக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவளித்த இடதுசாரி கட்சிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்போம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் முயற்சி தோல்வியா?

கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட்டணி கட்டமைப்புக்குள் கொண்டுவர தமிழக வெற்றிக் கழக தலைமை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆட்சியை நிலையான முறையில் நடத்துவதற்கும், கூட்டணிக் கட்சிகளுடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இடதுசாரிகளின் பங்கேற்பு முக்கியம் என தவெக தலைமை கருதியதாக தெரிகிறது.ஆனால், கம்யூனிஸ்டுகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்திருப்பதால், அந்த முயற்சி தற்போது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

கூட்டணி ஆட்சிக்கு முன் நிற்கும் சவால்

2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டப்பேரவை உருவாகி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், எந்த நேரத்திலும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஆட்சிக்கு சிக்கல் உருவாகலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.இதனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தெளிவான கட்டமைப்பை உருவாக்க தவெக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆனால், இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அவர்களை கூட்டணிக்குள் கொண்டுவர முடியாத சூழலில் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Source link