சென்னை: பிரபல பாடகியும், பீஹார் மாநில பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுமான மைதிலி தாக்கூர், தமிழ கத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், பிரபல பாடகி மைதிலி தாக்கூர், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றார். 26 வயதான அவர் எம்.எல்.ஏ., ஆனது, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அது மட்டுல்லாது, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற, ‘கண்ணான கண்ணே…’ பாடலை மைதிலி பாடிய வீடியோ வெளியாகி, தமிழகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
கடந்த பிப்ரவரியில், கேரள மாநிலம் பாலக்காட்டில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மைதிலி, ‘அழகான பழனிமலை ஆண்டவா…’ என்ற தமிழ் கடவுள் முருகனின் பக்திப் பாடலை பாடினார்.
இதுவும் சமூக வலைதளங்களில் பரவியது. அதை தொடர்ந்து, புதுச்சேரி ஆரோவில் பகுதியில் நடந்த ஆன்மிக விழாவில், இதே பாடலை பாடினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, மைதிலி பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
நெய்யாற்றங்கரை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ராஜசேகரன் நாயரை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்தார். அப்போது, பெரும் கூட்டம் திரண்டது.
இதனால், அவரை தமிழகத்தில் பிரசாரம் செய்ய வைக்க, பா.ஜ., நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், முருகன் பாடல்களை பாடி, அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
