அமைச்சர் ஸ்ரீநாத் தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிப்பா? முதல்வர் விஜய் எடுக்கும் எமோஷனல் முடிவு – tamil nadu cm vijay plans to drop his close friend srinath from tvk cabinet in next shuffle

விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று கூறப்படும் நிலையில், நிதித்துறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த சூழலில் தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் குறித்து முக்கிய முடிவெடுக்க முதலமைச்சர் விஜய் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. முதல்முறை கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்பட்டது. தவெக, திமுக இடையில் அனல் பறக்கும் விவாதங்களை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் பார்த்தனர். இந்த கூட்டத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு பாராட்டு தெரிவிக்கவுள்ள முதலமைச்சர் விஜய், வரும் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத்

லண்டன் பயணம் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நிதித்துறை அமைச்சர் மரியவில்சனுக்கு பள்ளிக் கல்வித்துறையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நிதித்துறையும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படவுள்ளன.

அதுமட்டுமின்றி சிலரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பெயர் அடிபடுகிறது. ஸ்ரீநாத்தை பொறுத்தவரை விஜய்யின் நீண்ட கால நண்பர். பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். விஜய் தனது நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அதில் ஸ்ரீநாத்தும் இடம்பெற்றிருப்பார்.

தவெகவிற்கு நெருக்கடியாக மாறிய தூத்துக்குடி அஜிதா விவகாரம்

இதுபோன்ற குழப்பங்களுக்கு மத்தியில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வந்தது. வேட்பாளர் தேர்வில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அஜிதா விஷயத்தை கருத்தில் கொண்டு நம்பிக்கைக்குரிய ஆட்களை விஜய் தேடினார். அப்போது தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் பெயரை டிக் அடித்து வேட்பாளர் பட்டியலில் சேர்த்து அம்மாவட்டத்தை சேர்ந்த தவெகவினருக்கு ஆச்சரியம் அளித்தார்.

பின்னர் செல்வாக்கு மிக்க திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை விஜய் அலையால் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தோல்வி

கடந்த ஆண்டு டிசம்பரில் தூத்துக்குடியை சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா தொடர்பான சர்ச்சை ஒன்று வெடித்தது. இவர் தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால் சென்னை வந்து தவெக தலைமை அலுவலகமான பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கட்சி தலைவர் விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் இவர் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்தன.

மீன்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கிய விஜய்

இதையடுத்து மீன்வளத்துறையை ஒதுக்கி அமைச்சரவையில் சேர்த்து ஸ்ரீநாத்திற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சை முதலமைச்சர் விஜய் பெரிதும் ரசித்து பார்த்தார். ஆனால் அமைச்சராக ஸ்ரீநாத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று உளவுத்துறை மூலம் நோட் கிடைத்துள்ளது.

துறை சார்ந்த விஷயங்களை ஆர்வத்துடன் கற்பதில் பின்னடைவை சந்தித்து வருகிறாராம். அதிகாரிகள் உடனும் பெரிதும் இணக்கம் இல்லையாம். மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சிப்பதிலும் சிரமப்படுகிறாராம்.

விஜய்க்கு கிடைத்த உளவுத்துறை நோட்

இதுதவிர மேலும் சில செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சருக்கு நோட் சென்றிருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தவெக அமைச்சரவையில் இருந்து விலக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

விஜய்யை பொறுத்தவரை ஒவ்வொரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் எதிர்க்கட்சிகளின் கணிப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை தாண்டி திறம்பட செயல்பட வேண்டும் என விரும்புகிறார். அரசியலுக்கு புதிதாக இருந்தாலும் கூட, தேவையான விஷயங்களை விரைவாக கற்றுக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்.

விரைவில் தவெக அமைச்சரவை மாற்றம்

எந்த ஒரு சூழலிலும் தவெக அரசு மீது களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். எனவே தான் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிறந்த நிர்வாக திறனை உறுதி செய்ய முடிவு செய்திருக்கிறார். ஸ்ரீநாத் விஷயத்தில் முதலமைச்சர் விஜய்யின் முடிவு சற்று எமோஷனலான ஒன்று தான் என்கின்றனர்.

Source link