மும்பை: மொபைல் எண்ணை மாற்றாமலேயே, செல்போன் இணைப்பை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை போலவே, வங்கி கணக்குகளையும் அக்கவுன்ட் நம்பரை மாற்றாமல் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் ‘2028ம் ஆண்டுக்கான பேமென்ட் தொலைநோக்கு’ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
‘பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ்’ எனும் புதிய கட்டமைப்பை உருவாக்குவதன் வாயிலாக, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு சேவைகளை மாற்றும்போது உருவாகும் மிகப்பெரிய பிரச்னைகளை களைய திட்டமிடப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒரு வங்கி கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சம்பளம், மியூச்சுவல் பண்டு, கடன் தவணை மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற அனைத்து விபரங்களையும் புதிய வங்கியில் ஒவ்வொன்றாக மாற்ற வேண்டிய சிரமம் உள்ளது.
இந்த தடையை நீக்கி, வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சிறந்த வட்டி விகிதம் அல்லது மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு எந்தவித தடையுமின்றி மாறுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும்.
இதன் வாயிலாக வங்கி துறையில் ஆரோக்கியமான போட்டி உருவாகும்.
இவ்வாறு அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
