கோவை: ”தி.மு.க.,- காங்., ஆகிய இரண்டு கட்சிகளுமே, வாரிசு அரசியலின் பூர்வகுடி,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் நேற்று பிரசாரம் செய்தார். சிங்காநல்லுார் தொகுதியில், அவர் பேசியதாவது:
ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்வது எளிது; உடனே பற்றிக்கொள்ளும். ஆனால், நாங்கள் அந்த அரசியலை செய்ய மாட்டோம்.
உங்கள் மொழியான தமிழ், உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் என்பது மொழி அல்ல, உயிர். மொழி அழிந்தால் வரலாறு அழியும். இந்த மொழிக்காக காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் போராடியதா?
வாரிசு அரசியலின் பூர்வகுடியே காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கட்சிகள் தான். கருணாநிதிக்கு பிறந்ததாலேயே, ஸ்டாலினிற்கு முதல்வர் பதவி; இதுதான் கொடிய சனாதனம்.
தி.மு.க., – காங்., இரண்டுமே கூட்டு களவாணிகள். காவிரி நதி நீரை பறித்தது, காங்கிரஸ், கொடுத்தது தி.மு.க., இதுபோல, ஈழத்தமிழரை அழிக்க ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ், உதவி செய்தது தி.மு.க., பிறமொழி பேசும் இனத்துக்கு, இப்படி நடந்திருந்தால், இந்த இரண்டு கட்சிகளால் ஒரு ஓட்டு வாங்க முடியுமா?
இவ்வாறு, அவர் பேசினார்.
கவுண்டம்பாளையத்தில், சீமான் பேசியதாவது:
அரசியல் என்பது புனிதமான அமைப்பு; அதைக்கொன்று லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டனர். இலவச அறிவிப்புகளை, ஆட்சியின் சாதனைகளாக சொல்வது எவ்வளவு வேதனையானது? நல்ல ஆட்சி கொடுத்திருந்தால், மீண்டும் தொடர, மக்கள் ஓட்டு போடுவர்; காசு, பொருள் ஏன் கொடுக்க வேண்டும்? தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது தான், மக்களிடம் என்ன தேவை என கேட்கின்றனர்.
தன்னையும் மக்களையும் நம்பாதவன் தான் இரண்டு தொகுதியில் நிற்பான். நான் மாஸ்… பிளாஸ்ட்… உச்சம்… பெரிய ஹீரோன்னா தனித்து நிற்கணும். நம்பிக்கையோட நிற்கணும். உனக்கே நம்பிக்கை இல்லை. ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம்.
இவ்வாறு அவர் பேசினார்.
