கீவ்: வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் ரஷ்யா, உக்ரைன் போரை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அழுத்தம் தருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
நேட்டோ நாடுகளுடன் இணையும் உக்ரைனின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, அந்நாட்டு மீது போர் தொடுத்தது. 2002ம் ஆண்டு தொடங்கிய இந்த போரை முடிவுக்குக் கொண்டு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வருகிறது.
4 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போருக்கு தீர்வு காண அண்மையில் அபுதாபியில் முதல் முறையாக அமெரிக்கா,ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சு நடந்தது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், உக்ரைன்-ரஷ்யாவுக்கு அமெரிக்கா காலக்கெடு வழங்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
முதல்முறையாக அமெரிக்காவானது, உக்ரைன் மற்றும் ரஷ்ய குழுக்கள், மியாமியில் ஒரு வாரத்திற்குள் சந்திக்க வேண்டும் என்று முன்மொழிந்து இருக்கிறது. மேலும், ஜூன் மாத இறுதிக்குள் போரை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா கூறுகிறது. காலக்கெடுவுக்குள் அதை நிறைவேற்றாவிட்டால் எங்கள் இரு தரப்பினருக்கும் அமெரிக்கா அழுத்தம் தரும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.
முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைன் ராணுவ வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டதாக ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
