– டில்லி சிறப்பு நிருபர் –
தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கில் பதிலளிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், 3.94 கோடி ரூபாய் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தி.மு.க., அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அவரை விசாரணை நீதி மன்றம் விடுவித்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், ஆறு மாதத்துக்குள் மீண்டும் விசாரணையை நடத்தி முடிக்கும்படி 2025ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியார் வைத்த வாதம்:
அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கவர்னர் தான் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், அமைச்சர் பதவிக்காலம் முடிந்து எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரத்தில் சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.
அவ்வாறு சபாநாயகர் அனுமதி அளிக்க முடியாது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் புதிதாக விசாரணை நடத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற வழக்கில் மீண்டும் புதிதாக முதலில் இருந்து விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. ஏற்கனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
ஆனால், உயர் நீதிமன்றம் அதை மீறி, தற்போது புதிதாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மற்றொரு அமைச்சரான பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டு, ஏப்ரல் 20-க்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும், துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க வேலுார் விசாரணை நீதிமன்றத்துக்கு தடை விதித்தனர்.
அதோடு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
