சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், அணியை ஆக்ரோஷமாக கட்டமைக்கும் ஆற்றல் கொண்டவரை புது தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்ட, சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ‘‘தனக்கு, தலைமை பயிற்சியாளர் பதவியை கொடுத்தால் சிறப்பாக செயல்படுவேன்’’ எனக் கூறினார். இதுகுறிதுத பரிசீலித்த சிஎஸ்கே நிர்வாகம், இந்தியாவை சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாம்.
புது பயிற்சியாளர் யார்: தற்போது, புது தலைமை பயிற்சியாளரை சிஎஸ்கே நிர்வாகம் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை நியமிக்க முடிவு செய்துள்ளார்கள். இதற்குமுன், இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டது கிடையாது.
இங்கிலாந்து ஒருநாள் அணிக்காக 126 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, 76 வெற்றிகளையும், 40 தோல்விகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். 72 டி20 போட்டிகளில், 42 வெற்றிகளையும், 27 தோல்விகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதத்தை வைத்து பார்க்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்திருக்கிறார். இவர், சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை.
இருப்பினும், இவரை தொடர்புகொண்ட சிஎஸ்கே அணி நிர்வாகிகள், தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்கு, மோர்கனும் ஒப்புக் கொண்டுள்ளாராம். இருப்பினும், ஊதியமாக, ஆண்டுக்கு 20 கோடியை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் வரலாற்றில், இதுவரை எந்த பயிற்சியாளருக்கும், 10 கோடி கூட ஊதியமாக கொடுக்கப்படதில்லை.
அதிகபட்சமாக, பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் 9.5 கோடி வாங்குகிறார். குஜராத் டைடன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா, 9 கோடியை வாங்குகிறார். நிலைமை இப்படியிருக்க, இயான் மோர்கன் 20 கோடி கேட்பது, சிஎஸ்கே நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயான் மோர்கனுக்கு தற்போது 39 வயதாகிறது. அவரை, தலைமை பயிற்சியாளராக நியமித்தால், பல ஆண்டுகளுக்கு பயிற்சியாளர் பிரச்சினை இருக்காது. இதனால்தான், சிஎஸ்கே இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில், இயான் மோர்கனை தொடர்புகொண்டு மகேந்திரசிங் தோனி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயான் மோர்கனுக்கு, அதிகபட்சமாக 15 கோடி வரை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சம்பள பிரச்சினையை பேசி முடிக்க தோனி முடிவு செய்துள்ளார். இதனால், இயான் மோர்கன் விரைவில் சென்னை வந்து, சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பிறகு, ஐபிஎல் 2027 சீசனுக்கு சிஎஸ்கே கேப்டன் யார் என்பதை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். கேப்டன் பதவிக்கு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சண்டைபோடும் நிலையில், இதனால், சிஎஸ்கே நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். ஆகையால், ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
