ஈரோடு: அதிமுக பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி என தமிழகமே சொன்னது; பெண்களுக்கான பாதுகாப்பு இபிஎஸ் ஆட்சியில் கேள்விக் குறியாக இருந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் என்பது அனைத்து துறை வளர்ச்சி மாடல்; ஈரோட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்; திமுக அரசின் திட்டங்களால், வீட்டுக்கு ஒருவராவது பயனடைந்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பை பற்றி இபிஎஸ் பேச தகுதி இல்லை; அதிமுக பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி என தமிழகமே சொன்னது; பெண்களுக்கான பாதுகாப்பு இபிஎஸ் ஆட்சியில் கேள்விக் குறி.
பாலியல் தொல்லை
நாட்டிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு போகும் மாநிலம் தமிழகம். தமிழகத்தின் வளர்ச்சி இபிஎஸ்க்கு எரிச்சலை தருகிறது. 86 சதவீதத்திற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது திமுக ஆட்சியில் தான். அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கு டிஜிபியே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டத்தை திருத்தியுள்ளோம். அதிமுக அரசின் சாதனைகளை சொல்ல இபிஎஸ்யிடம் எதுவுமில்லை.
துரோகம் லிஸ்ட்
மதுரை எய்ம்ஸை தவிர பாஜ சாதனை என்று சொல்ல பிரதமரிடம் ஒன்றும் இல்லை. நீட் துரோகம், மெட்ரோ துரோகம் என தேஜ கூட்டணியின் துரோகம் லிஸ்ட் நம்மிடம் உள்ளது. என்டிஏ என்னும் துரோக கூட்டணியை தமிழக மக்கள் ஏப்ரல் 23ம் தேதி நிச்சயம் தூக்கி எறிவார்கள். ஸ்டாலினின் இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பீர்கள். காரணம் திராவிட மாடல் என்பது டெவலப்மெண்ட் மாடல்.
வாக்குறுதிகள்
அனைத்துத் துறைகளின் வளர்ச்சியாகவும், அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றமாகவும், அனைத்து மாவட்டங்களின் முன்னேற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
