ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி; குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம்

ஆந்திர மாநிலத்திலிருந்து கடந்த 2014 ஆண்டு தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப் பிரிவு 5 (2) -ன் படி, தற்காலிகமாக ஐதராபாத் இந்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்றும், பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த ஐதராபாத் தெலுங்கானாவில் தலைநகராகத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராகக் கட்டமைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தார்.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன், ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை முன் மொழிந்தார். அதன்படி, அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும், விசாக பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் அறிவித்தார். எனினும், இந்த திட்டத்தை 2021 ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திரும்பப் பெற்றது. 

இதையடுத்து, கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, அம்மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரித்து, அதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த, ‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா 2026’ மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று (01-04-26)  மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  

Source link