கேரள தேர்தல் பிரச்சாரத்தில் தேஜஸ்வி; கலக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர்

கேரளத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  

அதே நேரத்தில், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அவர்கள் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகத் தாக்கி, விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதன் நீட்சியாக, அடுத்த கட்ட பிரச்சார யுக்தியையும் அவர்கள் கையாண்டு உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது, காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்தியா கூட்டணியில்  நடுமுழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளும் உள்ளன. குறிப்பாக, இந்த கூட்டணியில் இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், விசிக, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரே கூட்டணியில் இருந்த போதிலும், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் எதிரெதிர் அணியில் நிற்கின்றனர். இது ஏற்கனவே விமர்சனத்திற்குள்ளானது. இருப்பினும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், இந்த சட்டமன்ற தேர்தலிலும் தனித்து களம் காண்கின்றனர். 

இந்நிலையில், அதே இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜெடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாகக் கடந்த செவ்வாய் (31-03-26) அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது கேரள அரசியலில் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. அதே வேளையில், காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவிற்கு முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.  அதில், “நேரில் வந்து இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்விக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கேரளத்தின் வெற்றியை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.   

Source link