ஒடிஷா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான பிஜு பட்நாயக் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஷிகாந்த் துபே மன்னிப்பு கோரினார். கடந்த வெள்ளிக்கிழமை (27-03-26) அன்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டார். அதில் நேரு குடும்பத்தைப் பற்றிப் பேசியதும், பிஜு பட்நாயக் குறித்துப் பேசியதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நேரு-காந்தி குடும்பத்தினரின் செயல்பாடுகள் குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. குறிப்பாக, இந்தியாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக் குறித்து நான் பேசியது, நேரு குடும்பத்தைப் பற்றிப் பேசிய கருத்துக்களுடன் சேர்த்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. சொல்லப்போனால், என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை நான் முன் வைத்தேன் அவ்வளவு தான். நேருஜி பற்றி நான் பேசிய கருத்துக்கள், பிஜு பாபுவைப் பற்றிக் கூறியதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
பிஜு பட்நாயக் மீது நான் கொண்டுள்ள மரியாதை அளவில்லாதது. அவரை ஒரு “மிகச் சிறந்த ராஜதந்திரி” என்றே நான் பார்க்கிறேன். பிஜு பாபு எப்போதும் எங்களுக்கு ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரியாகவே இருந்து வருகிறார். இனியும் அவ்வாறே இருப்பார். எனது கருத்து யாரேனும் ஒருவரின் மனதைப் புண்படுத்தியிருந்தால், நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, “1960-களில் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த செயல்பாடுகள் சரியான முறையில் கையாளப்படவில்லை. 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்தில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுக்கும் (CIA) இடையே தொடர்புகள் இருந்தது. மேலும், அமெரிக்க அரசு, சி.ஐ.ஏ மற்றும் நேரு ஆகியோருக்கு இடையே பிஜு பட்நாயக் ஒரு இடைத்தரகராகச் செயல்பட்டார். பாதுகாப்புத் துறை சார்ந்த மிக முக்கியமான பொறுப்புகள் பட்நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததார்” என்று நிஷிகாந்த் துபே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
