தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. அதன் தொடர்ச்சியாக “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி” உருவானதாக கூறப்படுகிறது.இதில் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே அளிப்போம் என்றும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசின் பெரும்பான்மை பலத்தை மேலும் உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
தாராபுரத்தில் சத்யபாமாவுக்கு சவால்
தாராபுரம் தொகுதியில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தைச் சார்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 70 ஆயிரம் அருந்ததியர் சமூக வாக்குகளும் இத்தொகுதியில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தற்போது தவெக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது தனிப்பட்ட செல்வாக்கும் கடந்த தேர்தல் வாக்குகளும் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சத்யபாமாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் விருப்பமனு வழங்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன.
மதுராந்தகத்திலும் நேரடி போட்டி
மதுராந்தகம் தொகுதியிலும் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் தற்போது தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் போட்டியிடுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய்க்கு உள்ள ஆதரவு மதுராந்தகம் தொகுதியிலும் தவெகவுக்கு சாதகமாக அமையும் என அக்கட்சி தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. தனித்தொகுதியான மதுராந்தகத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு இரண்டு வெற்றிகள் ஏன் முக்கியம்?
இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால், இரண்டு புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள். குறிப்பாக இரு வேட்பாளர்களும்வழக்கறிஞர்கள் என்பதால், சட்டப்பேரவையில் திமுகவின் விவாதப் பலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பக்கபலமாக செயல்படும் இளம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதே நேரத்தில், தவெக அரசுக்கு கிடைக்கக்கூடிய பெரும்பான்மை பலத்தை கட்டுப்படுத்தி, சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட திமுகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதிமுகவுக்கு இது கௌரவப் போட்டி
அதிமுகவுக்கும் இந்த தேர்தல் முக்கியமானதாக அமைந்துள்ளது. அக்கட்சியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களே பதவியை ராஜினாமா செய்து மாற்றுக்கட்சியில் இணைந்து தற்போது அதே தொகுதிகளில் தேர்தலை சந்திக்கின்றனர்.எனவே, தனது முன்னாள் எம்எல்ஏக்களை எதிர்த்து அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகவும் கௌரவ ரீதியாகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் கட்சிகள்…அடுத்த திட்டம் என்ன?
தவெக ஆட்சிக்கு முக்கியமான பரீட்சை
பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற அரசியல் பார்வை உள்ளது. அந்த எதிர்பார்ப்பை உறுதி செய்யும் வகையில் தவெக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், விஜய் அரசின் பெரும்பான்மை மேலும் வலுப்பெறும். குறிப்பாக, இடதுசாரிகளின்ஆதரவு இல்லாமலேயே கூட்டணி கட்சிகளின் பலத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளையும் சுமூகமாக ஆட்சி நடத்துவதற்கான அரசியல் நம்பிக்கையை இந்த வெற்றி தவெகவுக்கு வழங்கக்கூடும். இதனால் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல், மூன்று முக்கிய கட்சிகளின் அரசியல் பலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான களமாக மாறியுள்ளது.
Source link
