சென்னை கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான வேலைகளில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக நேற்றைய தினம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இங்கு ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே மீனவர்கள் வசித்து வருகின்றனர். முழுவதும் மீனவர்கள் கிராமமாக பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் புதிய திட்டமானது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த மீனவ கிராமத்தை சேர்ந்த ஒருவர் நமது சமயம் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள இடமானது முள்ளிக்குப்பம் என்ற மீனவ கிராமத்திற்கு சொந்தமானது. அவர்களின் பட்டா இடம்.
மீனவர்களுக்கு வீடு- நம்பிக்கை அளித்த தமிழக அரசு
இங்குள்ள மக்கள் குடிசை வீடுகளில் வசித்ததை பார்த்த தமிழக அரசு, கடந்த 1957ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் 800 சதுர அடியில் ஒவ்வொரு மீனவருக்கும் வசதியான வீடுகள் கட்டி தருவதாக கூறி நிலத்தை வாங்கி கொண்டனர். நவீன கழிவறை மற்றும் மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்கு தனி இடம் கட்டமைக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த திட்டத்தை கையில் எடுக்கும் போது மத்திய அரசு பெரிதும் பாராட்டுகிறது.
TVK அரசின் புது சாதனை!ஒரே TENDER க்கு 9 பேர் போட்டி! யாரும் செய்யாததை செய்யும் CM
ஒரே இடத்தில் 3 மீனவ கிராமங்கள்
நிலத்தை மட்டும் கையகப்படுத்திய தமிழக அரசு, கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. நெருக்கமான குடியிருப்புகளை கட்டி முள்ளிக்குப்பம் கிராம மக்கள் வசித்த பகுதியில், நொச்சிக்குப்பம், டுமீல்குப்பம் ஆகியோரையும் சேர்த்து மூன்று மீனவ கிராம மக்களை தங்க வைக்க முயற்சிகள் நடந்தன. இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீன்பிடி தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என அரசுக்கு அறிவுறுத்தினர். ஆனால் எந்தவித பலனும் இல்லை.
திமுக, அதிமுக மீது மீனவர்கள் அதிருப்தி
இதையடுத்து சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மீனவ மக்கள் யாருமே செல்லவில்லை. அதன்பிறகு அதை அரசு ஊழியர்கள் குடியிருப்பாக மாற்றிவிட்டனர். மீனவ கிராம மக்களுக்கான குடியிருப்பு என்பதை உறுதி செய்யும் வகையிலான கல்வெட்டு கூட அப்பகுதியில் இருக்கிறது. அடுத்து வந்த திமுக, அதிமுக ஆட்சிகளில் பல்வேறு பகுதிகளில் வசித்த மக்களை அழைத்து வந்து முள்ளிக்குப்பம் குடியிருப்புகளில் தங்க வைத்தனர். ஆனால் மீனவ மக்களை கண்டுகொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
புதிய தலைமை செயலகம் திட்டம் – வெடிக்கும் சர்ச்சை
மற்ற மீனவ கிராமங்களை காட்டிலும் அதிக சிரமத்தில் தவித்து வருவது முள்ளிக்குப்பம் தான். ஏனெனில் முகத்துவாரம் இருப்பதால் எப்போதும் ஆபத்தான சூழலிலேயே வசிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முள்ளிக்குப்பம் மீனவ கிராம மக்கள் தங்கள் நிலத்தை தங்களுக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர். அதிகாரிகள், ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு முள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள இடத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இப்பகுதியில் உள்ள 20 ஏக்கர் நிலமானது வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளது. அதுதான் மீனவ மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட இடம். இதில் அவர்களுக்கு தேவையான வீடுகளை கட்டி தர வேண்டுமே தவிர, மாற்று திட்டத்தை முன்னெடுப்பது எப்படி சரியாக இருக்கும் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
சாந்தோம் நெடுஞ்சாலை – கடும் போக்குவரத்து நெரிசல்
நொச்சிக்குப்பம் முதல் முள்ளிக்குப்பம் வரை மொத்தம் 9 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரது முதன்மையான தொழில் என்பது மீன்பிடி தொழில். சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 15 பள்ளிகள் இருக்கின்றன. இதனால் சாந்தோம் நெடுஞ்சாலையில் நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது. இதை சரிசெய்வதற்கே எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலானது அடையாறு வரை நீள்கிறது. இந்த சூழலில் புதிய தலைமை செயலகம் கொண்டு வந்தால் மேலும் நெருக்கடி அதிகரிக்கும். இதற்கிடையில் தங்களது மீன்பிடி தொழிலையும், மீன் விற்பனையையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தங்கள் பகுதியில் புதிய தலைமை செயலகம் வந்துவிட்டால் மீன்பிடி தொழிலையே செய்ய விடமாட்டார்கள்.
தவெகவிற்கு வாக்களித்த மீனவ மக்கள் – 3 மாதத்தில் அதிர்ச்சி
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மீனவ கிராம மக்கள் பெரும்பான்மையானோர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். சுதந்திர இந்தியாவில் மீனவ மக்களின் தேவையை உணர்ந்து எந்த ஒரு அரசும் செயல்படவில்லை. திமுக ஏதாவது செய்யும் என நம்பி வாக்களித்தோம். ஆனால் ஏமாற்றி விட்டனர். இவர்களுக்கு மாற்றாக புதிதாக ஒருவருக்கு வாக்களித்தோம். அவர்கள் எந்தவித நன்மையும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும் என நினைத்தோம். ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துவிட்டது என்கின்றனர்.
Source link
