கேரளத்தில் அடுத்த வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இடதுசாரி கூட்டணியினர், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் மூத்த தலைவர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே வேளையில், பீகார் மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை அழைத்து வந்து, கேரள சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் சற்றும் சளைக்காமல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களும் கேரளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கார்கே மற்றும் சசி தரூர் உள்ளிட்டோர் முன்னதாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (01-04-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதில், “நான் முன்னதாக ஐந்து ஆண்டுகள் கேரளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது எனது தாயார் உடல்நலம் குன்றியிருக்கும் நிலையிலும், நான் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். அங்கு எனது தாயாரை மலையாள செவிலியர்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் தான், நான் இங்கு உங்களுடன் தைரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரிடமும் இத்தகைய அன்பும், ஆதரவும் கிடைக்காது. எனக்கு ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் நான் வீழ்ந்து விடுவேனோ? என்று எண்ணும் போதெல்லாம், கேரள மக்கள் தான் எனக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
