சர்தார் படம் ஒரு ஸ்பை த்ரில்லர். பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் மனதில் நிலைத்து நிற்கவோ, அதன் இரண்டாம் பாகத்திற்கு ஏங்க வைக்கவோ இல்லை. சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் அதே உணர்வை தான் அளிக்கிறது.
McGuffin எனும் பயோ வெபனை சுற்றி தான் சர்தார் 2 கதை நகர்கிறது. பாதுகாக்கப்படும் அந்த ஆயுதம் தவறான ஆளுக்கு கிடைத்தால் பேரழிவு ஏற்படுவது நிச்சயம் ஆகும். இந்நிலையில் அந்த மோசமான ஆயுதத்தை தனிப்பட்ட காரணத்திற்காக பயன்படுத்தத் துடிக்கிறார் வில்லன் யோகி(எஸ்.ஜே. சூர்யா). RAW ஏஜெண்ட் விஜய் பிரகாஷ், அவரின் தந்தை சர்தார் ஆகியோர் யோகியின் நாச வேலையை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள். தான் கடந்த காலத்தில் செய்த மிஷன் மூலம் அந்த ஆயுதம் மற்றும் யோகி பற்றி சர்தாருக்கு தெரியும்.
சர்தார் மற்றும் யோகி நம்பிக்கை துரோகத்தை சந்தித்தவர்கள். ஆனால் நம்பிக்கை துரோகத்தை ஆழமாக காட்டாமல் போனதால் அது நம்மை பெரிதாக பாதிக்கவில்லை. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக உள்ளது. சர்தாரில் ஆக்ஷன் தானே கை கொடுத்தது என இரண்டாம் பாகத்திலும் அதே ஃபார்முலாவை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ். மித்ரன். இரண்டாம் பாகத்தில் எதிர்பாராத ஒரு மரணம் வேறு நடக்கிறது. ஆனால் மரணமும் நம்மை பாதிக்கவில்லை.
த்ரில்லர் படம் என்றால் அய்யோ அடுத்து என்ன நடக்குமோ என நகத்தை கடிக்க வைக்கவில்லை சர்தார் 2. அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அற்புதமாக நடித்திருக்கிறார் கார்த்தி. ஆனால் அவரின் மாஸ் காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கத் தவறிவிட்டது. சாம் சி.எஸ். இசை படத்திற்கு பெரிய மைனஸாகிவிட்டது. விசில் பறக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் சாம் சி.எஸ். இசையால் சுமாரான காட்சிகளாகிவிட்டது.
எஸ்.ஜே. சூர்யாவுக்கு பயங்கரமான அறிமுக காட்சி கொடுத்திருக்கிறார்கள். சர்தாரை வந்து பார் என்பார் என நம்பினால் அதன் பிறகு சூர்யாவுக்கு மாஸ் வேலை இல்லாமல் போய்விட்டது. மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் வந்து போகிறார்கள். மாளவிகாவுக்கு சூப்பரான ஒரு ஸ்டண்ட் காட்சி கொடுத்திருக்கிறார் பி.எஸ். மித்ரன். காதல் டிராக் இல்லாதது சர்தார் 2 படத்தின் பெரிய பலமாக அமைந்துவிட்டது என தாரளமாக கூறலாம்.
தன் படங்களில் மக்களுக்கு ஸ்டிராங்கான மெசேஜ் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன். சர்தாரில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் தீமை குறித்து மெசேஜ் சொன்னார். சர்தார் 2 படத்தில் அதிகமாக ஆன்ட்டிபயாட்டிக்ஸ் உட்கொண்டால் என்னவாகும் என கூறியிருக்கிறார். மித்ரன் சொல்ல வந்திருப்பது முக்கியமான மெசேஜ் தான் என்றாலும் அது மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. தாக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விட்டது.
சர்தார் 2 படம் சூப்பர் என கார்த்தி ரசிகர்களும், சுமார் தான் என பிறரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் காசு கொடுத்து கார்த்தி படம் குறித்து நெகட்டிவாக பேச வைக்கிறார்கள் என அவரின் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
