“கடந்த பத்து ஆண்டுகளில்…” – தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை நிகிலா விமல்

கேரள சட்டமன்ற தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. 140 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக அன்றைய தினம் வாக்குப் பதிவு நடக்கிறது. அந்த வாக்கின் எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கின்றன. 

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் அங்கு சூடு பிடிக்க அதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை நிகிலா விமல், அழிகோடு தொகுதியில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் கே.வி.சுமேஷை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், “கடந்த முறை அழிகோடு தொகுதியில் சுமேஷ் அண்ணன் போட்டியிட்டபோது, ​​நான் அவரது சாலைப் பேரணியில் கலந்துகொண்டேன். அதுவே எனது முதல் சாலைப் பேரணியாகும். அந்த நேரத்தில், அவர் வெற்றிபெற வேண்டும் என்று நான் பிரார்த்தித்தேன். கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் சுமேஷுக்கு வாக்களிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 

சுமேஷ் அண்ணன் மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம். தளிப்பறம்பாவைச் சேர்ந்த ஒரு குடியிருப்பாளராக, புத்தியப்பறம்பா பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்த அதிகாரிகளுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்காகச் சுமேஷ் அண்ணன் மிகுந்த முயற்சி எடுத்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் அரங்கேறியுள்ளன. நமக்கு நன்கு அறிமுகமானவர்களே அந்த வளர்ச்சிப் பணிகளுக்குப் பின்னால் உள்ளார்கள் என்பது நமக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் ஒரு விஷயமாகும். இந்த முறையும் சுமேஷ் அண்ணன் அமோக பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்றார். 

Source link